86 கி.மீ. நீள பயணம்... - தூய்மைப்படுத்தப்படாத திருப்புவனம் வைகை ஆறு!

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நதிக்கரையில்தான் நாகரிகம் உருவானது என்பர். வரலாற்றுக்கு முந்தைய கற்காலத்தில் ஆறுகள், சிற்றாறுகளின் கரையோரம் வசிக்கத் தொடங்கிய மனிதர் கூட்டம் விவசாயம், கலாச்சாரம், ஆன்மிகத்தை வளர்த்தெடுத்து நாகரிகமான மனிதர் களாக உருவெடுத்தனர்.

அப்படி வைகை ஆற்றின் கரையோரம் உருவான பழமையான கலாச்சார நகரம்தான் மதுரை. தற்போது வைகை ஆறு வறட்சிக்கு இலக்காகி, அதன் சிற்றாறுகளும் வறண்டு போய் விட்டன. இதனால் முன்பிருந்த திருவிழா கொண்டாட்டங்கள் தற்போது இல்லை. இப்படி தமிழகத்தில் அழிந்துபோன சிற்றாறுகள் எண்ணி லடங்காதவை.

இந்த சிற்றாறுகளின் அழிவே தமிழகத்தின் வற்றாத ஜீவ நதிகளாக கருதப்பட்ட தாமிரபரணி, வைகை ஆறுகள் வறண்டுபோனதற்கு காரணம் என்கிறார் தமிழ்தாசன் என்ற இளைஞர். இவர் அழிந்து கொண்டிருக்கும் சிற்றாறுகளை தேடி ஆய்வு செய்து வரும் மதுரை பண்பாட்டு சூழலியல் பேரவையைச் சேர்ந்தவர். மதுரையில் அவர் ஆய்வு செய்த சிற்றாறுகளில் ஒன்றுதான் கிருதுமால் நதி.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வைகை ஆற்றை போல மலைக்காடுகளில் உற்பத்தியாகும் 10-க்கும் மேற்பட்ட ஆறுகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன. வைகையுடன் கிருதுமால் நதி உட்பட பல துணையாறுகளும் இணைந்துதான் முன்பு மதுரையைச் செழிப்படையச் செய்தன. பெரிய நதியான வைகை ஆறு சுருங்கி சாக்கடையாக மாறிப்போன பிறகு, மற்ற ஆறுகளின் நிலையை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

மதுரைக்கு மேற்கே அமைந்துள்ள நாகமலையில் உருவாகிறது கிருதுமால் நதி. நாகமலையில் உற்பத்தியாகும் ஓடைகள், ஊற்றுகள் மலையடிவாரத்தின் வடகிழக்கு முனையில் உள்ள துவரிமான் – மாடக்குளம் கண்மாயில் விழுந்து விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ் நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரை மாநகரை கடக்கிறது.

மாடக்குளம் கண்மாய், அவனியாபுரம் கண்மாய், சிந்தாமணி கண்மாய் உபரி நீர் கிருதுமால் நதிக்கு வந்து சேர்கிறது. வைகை ஆற்றின் குறுக்கே விரகனூரில் கட்டப்பட்டுள்ள மதகணையில் இருந்து வெள்ள உபரி நீர் கால்வாய் வழியாக கிருதுமால் நதிக்கு திருப்பி விடப்படுகிறது.சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாய் உபரி நீரும் கிருதுமால் நதிக்கு வந்து சேர்கிறது.

அங்கிருந்து கிருதுமால் நதி கொந்தகை, அம்பலத்தடி, ஒடத்தூர், கட்டனூர், ஆத்திக்குளம், நல்லுக்குறிச்சி, அபிராமம் வழியாகச் சென்று பரளையாறு கால்வாய் மற்றும் ரெகுநாத காவேரி கால்வாயோடு இணைந்து கமுதி அருகே மலட்டாறு என்னும் குண்டாற்றில் கலக்கிறது. கிருதுமால் நதி பயணிக்கும் 86 கி.மீ. நீள பயணத்தில், 73 சங்கிலித் தொடர் கண்மாய்கள் தண்ணீர் பெறுகின்றன.

தற்போது பெரியார் பேருந்து நிலையமாக மாறிப்போன வலைவீசி தெப்பத்துக்கும், கூடலழகர் தெப்பத்துக்கும் கிருதுமால் நதிதான் தண்ணீர் கொண்டு வந்தது. கூடற்புராணம் கூடலழகர் கிருதுமால் நதியை தனது கழுத்தில் மாலையாக அணிந்திருந்தார் என்று போற்றுகிறது. தைப் பூசத்துக்கு முதல் அறுப்பு திருவிழாவன்று சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மனும் கோயிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணி அருகே கிருதுமால் நதிக் கரைக்கு சேத்தி ஆவர்.

மீனட்சியம்மனே நெல் அறுவடை செய் கிறாள் என்பதை வெளிப்படுத்தும் ஐதீகம் இது. நகரின் மையப்பகுதிகளில் சிந்தாமணி, அவனியாபுரம் வாய்க்கால்களின் உபரி நீரும், கிருதுமால் நதியோடு கலந்து செல்லும் வகையில் நீர் வழிகள் இருந்தன. சில இடங்களில் குறுகியும், பல இடங்களில் நாற்பது அடிக்கு மேல் அகலமாகவும் கிருதுமால் ஆறு இருந்துள்ளது.

இன்று இந்த நதி சிமென்ட் தளம் அமைத்து, கழிவுநீர் கால்வாயாக ஓடிக் கொண்டு இருக்கிறது. மதுரை நகருக்குள் முற்றிலும் அழிந்து போன நிலையில் உள்ளது கிருதுமால்.1975-க்கு பிறகு மதுரைக்கு கிழக்கில் வைகையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விரகனூர் மதகணையின் உபரிநீர், கால்வாய் வழியாக கிருதுமால் நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, கீழ் கிருதுமால் நதி பாசனத்துக்கு உபயோகபடுத்தப்பட்டு வருகிறது.

முறையாக கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்து விடாததால் கிருதுமால் நதி பாசன விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE