காலநிலை மாற்றத்தால் அரபிக் கடலில் அதிகரிக்கும் புயல்கள்!

By செய்திப்பிரிவு

காலநிலை மாற்றத்தால் அரபிக் கடலில் புயல்கள் உருவாகுவது அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வட இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடாவுடன் ஒப்பிடுகையில் அரபிக் கடல் எப்போதும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. ஆனால், கடந்த 40 வருடங்களில் அரபிக் கடல் அதன் இயல்பிலிருந்து மாறுதல்களை சந்தித்து வருகிறது. Elsevier's Earth Science-ல் வெளியான கட்டுரையில் அரபிக் கடலின் வெப்ப நிலை 1.2 ° C முதல் 1.4 ° C வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நேச்சர் ஜர்னலில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், 1982-ஆம் ஆண்டு வரையிலான ஆய்வுக் காலத்தில் அரபிக் கடலில் காணப்படும் சூறாவளி புயல்களின் தீவிரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, 2001 -2019 கால இடைவெளியில் அரபுக் கடலின் தன்மை தீவிர மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கையில், அரபிக் கடலில் தன்மை மெல்ல மெல்ல மாறி வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயல்களின் மொத்த கால அளவு 80% அதிகரித்துள்ளது. மிகக் கடுமையான சூறாவளிகளின் கால அளவு 260% ஆக அதிகரித்துள்ளது. அரபிக் கடலின் தன்மையில் ஏற்பட்ட மாற்றம், மேலும் கடுமையான சூறாவளிகளை உருவாக்குவதற்கும், அதன் மீது நிலைத்திருப்பதற்கும் வழிவகுத்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் விரைவான வெப்பமயமாதல், புவி வெப்பமடைதலுடன் தொடர்புடையது. இது கடலில் வெப்பத்தின் அளவை அதிகரிக்கிறது. இது சூறாவளிகள் உருவாகும் தன்மைக்கு துணைபுரிகிறது. இதன் காரணமாக இவற்றை முன்கூட்டியே கணிப்பதும் சற்று கடினமாக உள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வன விலங்குகள், அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE