கள்ளக்குறிச்சியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழப்பு: குடிநீர் தேடி ஊருக்குள் வந்தபோது பரிதாபம்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள காப்புக்காட்டில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

கோடை காலத்தில் காடுகளில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையால் அவை குடிநீருக்காக ஊருக்குள் புகும் நிலை உள்ளது. அந்த வகையில் காப்புக்காட்டில் இருந்து நேற்று முன்தினம் வந்த மான் ஒன்று, தியாகதுருகம் அடுத்த எஸ்.முகையூர் கிராமத்திற்கு வந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிச் சென்றதாக தெரிகிறது. அப்போது ஊருக்குள் சுற்றித்திரிந்த தெருநாய்கள் மானை விரட்டின.

அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் நாய்களை விரட்டியபோதும், தெருநாய்கள் மானை விரட்டி கடித்து குதறின. இதில் அங்குள்ள கோயில் அருகே மான் மயங்கி விழுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் மானுக்கு தண்ணீர் கொடுத்தபோதும் அதனை பருகாமல் மான் உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர்கள், இறந்த மானின் உடலை மீட்டு காப்புக்காட்டில் புதைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE