கடல் வளப் பாதுகாப்பு பணிக்கு கிடைத்த அங்கீகாரம் - மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக இயக்குநர் சர்வதேச விருதுக்கு தேர்வு

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: சர்வதேச அளவில் உயிர்க்கோள மேலாண்மைக்கான யுனெஸ்கோவின் ‘மைக்கேல் பட்டீஸ் விருது’, இந்தியாவில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக இயக்குநர் ஜகதீஷ் பகான் சுதாகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடல் வளப் பாதுகாப்பு பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சர்வதேச அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. உலகில் 738 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன. இதில் 18 காப்பகங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்றாக ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரி வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் அமைந்துள்ளது.

இதில் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை 18 தீவுகள் உள்ளிட்ட 560 சதுர கி.மீ. பரப்பு மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்காவாக 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது நாட்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாகும். இங்கு 3,600 அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், 117 வகை பவளப்பாறைகள், கடற்பாசிகள், 217 வகை பறவையினங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் உள்ளன.

இவற்றை பாதுகாக்க ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் மற்றும் மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராகவும், தேசிய பூங்காவின் வன உயிரின காப்பாளராகவும் ஐஎப்எஸ் அதிகாரி ஜகதீஷ் பகான் சுதாகர் பணியாற்றி வருகிறார்.

இவர் உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்காக யுனெஸ்கோ அமைப்பு வழங்கும் சர்வதேச விருதான ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு விண்ணப்பித்தார். 2023-ம் ஆண்டுக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டார்.

சர்வதேச அளவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்காக யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் சான்றிதழ் மற்றும் 12,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 91 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

2022-23-ம் ஆண்டில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து இவ்விருதுக்கு ஜகதீஷ் பகான் விண்ணப்பித்தார். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு விண்ணப்பம் மட்டுமே யுனெஸ்கோ அமைப்புக்கு அனுப்ப வேண்டும். அதன்படி இந்தியாவிலிருந்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூலம் ஜகதீஷ் பகானின் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாட்டில் முதல் முறையாக இந்த விருதுக்கு ஜகதீஷ் பகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இவ்விருதை அவர் பெற உள்ளார். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உயிர்க்கோள காப்பக மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து 10 நிமிடங்கள் பேச உள்ளார்.

இதுகுறித்து ஜகதீஷ் பகான் சுதாகர் கூறியதாவது: கடல்வாழ் உயிரினங்கள் குறித்து பள்ளி மாணவர்களை கடற்கரை பகுதி, கடல் ஆமை குஞ்சு பொறிப்பகம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல், மீனவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மீன்பிடிப்பின்போது வலையில் சிக்கிய 5 கடல்பசுக்கள், 7 டால்பின்கள், 81 கடல் ஆமைகளை உயிருடன் மீட்ட 37 மீனவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி மற்றும் ஏர்வாடியில் 2 பிளாஸ்டிக் சேகரிப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களில் வருவோரிடம் பிளாஸ்டிக் பைகளை பெற்று, அவர்களுக்கு துணிப்பை வழங்கப்படுகிறது. தனுஷ்கோடி பகுதியில் 2 கி.மீ. தூரத்துக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு பாலிதீன் பைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படுகின்றன. இதுவரை மன்னார்வளைகுடா பகுதியில் 38.7 டன் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

70 ஹெக்டேர் பரப்பளவில் 70,000 மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதியில் பவளப்பாறைகள் மறு நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அரியமான், குருசடைத்தீவு, குருசடைத்தீவு கேட் 2, தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் ஆகிய 4 இடங்களில் சமுதாயம் சார்ந்த சூழல் சுற்றுலா மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மன்னார் வளைகுடா பகுதியில் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் 252 சுற்றுச்சூழல் வளர்ச்சி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீனவ மக்களான இவர்களுக்கு மாற்றுத் தொழிலான பனை ஓலைப்பொருட்கள் தயாரித்தல், கருப்பட்டி உற்பத்தி, அதன் மூலம் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வேலை மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சுய உதவிக் குழுவினர் மூலம் மரக்கன்றுகள் நடுதல், பனைவிதை நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளோம்.

இந்த ஓராண்டில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருது கிடைத்துள்ளது. இது எங்கள் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த விருதை வனத்துறை பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE