ராயக்கோட்டை வஜ்ஜிர நாதேஸ்வரர் கோயில் எதிரே மலைபோல குவிந்துள்ள குப்பை கழிவு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே வஜ்ஜிர நாதேஸ்வரர் கோயில் எதிரே மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவை அகற்றி, அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வஜ்ஜிர நாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ளது. இந்து சமய அறிநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

இங்கு வாரம்தோறும் திங்கள் கிழமை, விசேஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இக்கோயிலுக்கு எதிரே, ராயக்கோட்டை ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு்ள்ளது. துர்நாற்றமும் வீசி வருகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக கோயில் நுழைவு வாயில் எதிரே உள்ள காலி இடத்தில், ஊராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவை கொட்டி வருகின்றனர். மேலும், குப்பையை அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், புகை வெளியேறி சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

இதனால், கோயிலைச் சுற்றியுள்ள போடம்பட்டி, காளன்கொட்டாய், எல்லப்பன் கொட்டாய் பகுதிகளில் குடிநீரும் மாசடைந்துள்ளது. இதனால், பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும், மலைபோல குவிந்துள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE