மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் - வாழ்விடமாற்ற நடவடிக்கையால் யானை பாதிப்படைய வாய்ப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து திருநெல்வேலிக்கு கிட்டத்தட்ட 250 கி.மீ. தூரத்துக்கு லாரியில் ஏற்றி வரப்பட்ட அரிசி கொம்பன் யானை மணிமுத்தாறு பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் இருந்து தமிழகத்திலுள்ள பெரியார் வனச்சரலாயத்துக்கு அரிசி கொம்பன் யானையை மாற்றியதிலிருந்தே அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை தாக்கி கொல்லும் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், தேனிமாவட்டத்தில் கம்பம் பகுதியில் முல்லை பெரியாறு அணை அருகே உள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட இந்த யானை, திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத் துறையினர் முடிவு செய்து, அதை லாரியில் ஏற்றி சாலை மார்க்கமாக கொண்டுவந்தனர்.

தகிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்காமல் யானை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் வழியில் பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையின் தண்ணீர் லாரிகளில் இருந்து யானை மீது தண்ணீரை தெளித்து அதை குளிர்விக்கும் நடவடிக்கையைும் வனத் துறையினர் செய்திருந்தனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் யானையை குளிப்பாட்டினர்.

கம்பத்திலிருந்து திருநெல்வேலிக்கு கிட்டத்தட்ட 250 கி.மீ. தூரம் லாரியில் அழைத்து வரப்பட்ட அரிசிக்கொம்பன் மணிமுத்தாறு வனப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மணிமுத்தாறு சோதனை சாவடியிலிருந்து 75 கி.மீ. தொலைவில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, அடிக்கடி வாழ்விடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளால் யானைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த யானை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மணிமுத்தாறு வனப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளது மணிமுத்தாறு, சிங்கப்பட்டி, செட்டிமேடு பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அரிசி கொம்பன் விடப்பட்டால், பரப்பளவு அதிகம் கொண்ட இந்த வனப்பகுயிலிருந்து அது மனித குடியிருப்பு பகுதிக்குள் வருவது கடினமென்று வனத் துறை கருதுகிறது. ஆனால், வாழ்விட மாற்றத்தால், சூழலியல் தகவமைப்பு ஒவ்வாமை காரணமாக வனத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுத்துமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE