பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க உதகையில் காய்கறிகள் அறுவடை பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

உதகை: பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், உதகையில் காய்கறி அறுவடையை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், நூல்கோல், முட்டைகோஸ், டர்னிப் உட்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 5,980 ஹெக்டேரில் மலைத்தோட்டக் காய்கறிகள் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் உதகை மற்றும் கல்லட்டியில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. உதகையில் 12.6 மில்லி மீட்டரும், கல்லட்டியில் 2.3 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், காய்கறி பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், மலை தோட்டக் காய்கறிகளின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE