வெற்றியை ருசிக்க திமுகவுக்கு காங்கிரஸ் அவசியம்: கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற தீவிர முயற்சி

By எம்.சண்முகம்

ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானதும் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்த பலமுள்ள கட்சியாக கருதப்படும்பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் திமுககூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் அடுத்த பிரதான கட்சியாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கணிசமான இடங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காய்களை நகர்த்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தமிழகத்தில் பலகட்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுவாக்குகளை சேகரித்து வருகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ராகுலுக்கு திரளும் கூட்டத்தைப் பார்த்து திமுகவினரே ஆச்சர்யமடைந்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற முடியாமல் போனது, சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல்முடிவுகள் ஆகியவற்றின் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற குரல் திமுகவினர் மத்தியில் எழுந்தது. ஆனால், ராகுலுக்கு தற்போது திரளும் கூட்டம் திமுகவினரை மறுசிந்தனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தநிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிக்கும்போது, ‘சிறுபான்மையினரின் வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு தான் கிடைக்கும் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆனால், அது உண்மையில்லை. சிறுபான்மையினர் நம்புவது திமுகவை விட காங்கிரஸ் கட்சியைத் தான். காங்கிரஸ் கட்சியும் திமுக-வும் சேர்ந்து இருக்கும் போது தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இதை திமுக புரிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

சிறுபான்மை அமைப்புகளின் சார்பில்சிலர் கருத்து தெரிவிக்கையில், ‘சிறுபான்மையினர் திமுக அணியை விரும்புவது உண்மைதான். அதற்கு காரணம் அவர்களுக்கு நாட்டின் தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தான். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினரிடம் நட்பு பாராட்டும் கட்சிகளே.

ஆனால், சமீபகாலமாக சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் சக்தியாக தேசிய அளவில் பாஜக வளர்ந்துள்ளது. தமிழகத்திலும் அதிமுகவின் உதவியுடன் கால்பதித்து வருகிறது. பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நாட்டில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு தேசிய கட்சியால் மட்டுமே முடியும். அந்த இடத்தில் இருப்பது காங்கிரஸ் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும், அது மாநிலத்தில் இருந்து வருவதில்லை; மத்திய அரசிடம் இருந்து தான் வருகிறது.

எனவே, மத்திய அரசிடம் இருந்து வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தேசிய கட்சியின் பின்னால் நின்று அக்கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் சிறுபான்மை மக்களுக்கு உள்ளது. அதனால், சிறுபான்மை மக்கள் காங்கிரஸ் பக்கமே நிற்கின்றனர்’ என்று தெரிவித்தனர்.

சிறுபான்மை மக்களின் இத்தகைய உணர்வுகளை காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டுள்ளது. இதை திமுக-வுக்கு உணர்த்தும் முயற்சியிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொகுதி உடன்பாடு என்றமுக்கியமான கட்டத்துக்கு திமுக கூட்டணி வந்துள்ள நிலையில், இன்றைய அரசியல் சூழல், பிரதான வாக்கு வங்கியாக உள்ளசிறுபான்மையினரின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.

இந்த பின்னணியில் தமிழகத்தில் ராகுலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, செல்வாக்கு, திரளும் கூட்டம் குறித்த தகவல்கள்திமுக தலைமையின் கவனத்தையும் எட்டியுள்ளது. ஞாயிறு அன்று நெல்லையப்பர் கோவில் உள்பட உற்சாகமாக வளைய வந்தராகுல் காந்திக்கு கிடைத்த வரவேற்பை ஸ்டாலின் கவனத்துக்கு திமுகவினர் எடுத்துச் செல்லவும், திமுக தலைவர் ஸ்டாலின் உடனே ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் பிரச்சாரம் குறித்து பேசியுள்ளார்.

அடுத்து தமிழகம் வரும்போது முன்கூட்டியே தெரிவித்தால், ராகுல்-ஸ்டாலின் இருவரும் இணைந்து மேடையில் நின்று மக்களைச் சந்திப்பது குறித்து ஏற்பாடு செய்யலாம் என்ற தகவலும் ராகுலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களை பெற்றுத் தரும் என்று காங்கிரஸார் நம்பிக்கையுடன் உள்ளனர்.

புள்ளிவிவரங்களுடன் பேசத் தயாராகும் காங்கிரஸ்

தமிழகத்தில் உள்ள வாக்கு வங்கி குறித்து காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட்டுள்ள சர்வே ஒன்றில், கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் திமுகவுக்கு 28 இடங்கள் குறைவாக கிடைத்திருக்கும் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் 5 சதவீத வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகளில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் உள்ளன என்பதும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லையென்றால் 97 இடங்களில் வெற்றிபெற திமுக திணற வேண்டி இருந்திருக்கும் என்றும் அந்த சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் திமுக தான் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறது. தற்போது, இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என விரும்புகிறீர்கள் என எடுக்கப்பட்ட சர்வேயில், அந்தத் தொகுதியின் பெரும்பாலான முஸ்லீம் வாக்காளர்கள், காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த விவரங்களை எல்லாம் கையில் வைத்துக் கொண்டு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்