குமரி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் யார்?- காங்., பாஜக கட்சிகள் சார்பில் களமிறங்க கடும் போட்டி

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலோடு நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிஇடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக சார்பில் களமிறங்க கடும் போட்டி நிலவுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றஎச்.வசந்தகுமார் கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அதனால் காலியான கன்னியாகுமரி தொகுதிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் சூழல், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு அதிமுக, திமுகவைவிட காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் வலுவாக உள்ளன. எனவே, இங்கு காங்கிரஸ் - பாஜக இடையேதான் எப்போதும் போட்டி. வரும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் இருப்பதாலும், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகம்இருக்கும் தொகுதி என்பதாலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.விஜயதரணி, ஜே.ஜி.பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தம்பி விஜயகுமார், அசோக் சாலமன் என்று பலரும் காங்கிரஸ்சார்பில் போட்டியிட தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரியையும், மேலிடத் தலைவர்களையும் அணுகி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் சிறுபான்மையினர் யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. தமிழகத்திலேயே கிறிஸ்தவர்கள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதி கன்னியாகுமரி மட்டுமே. எனவே, இந்த முறை கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் வாய்ப்பு கேட்டாலும் காங்கிரஸ் மாநிலப் பொருளாளராக உள்ள ரூபி மனோகரன், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

கன்னியாகுமரியில் பாஜக சார்பில் கடந்த 1991முதல் கடந்த 2019 வரை 8 முறை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். 1999-ல் திமுக – பாஜக கூட்டணியில் வென்ற அவர், வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். 2014-ல் பாஜக – தேமுதிக – பாமக – மதிமுக கூட்டணியில் வென்று மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். கடந்த 2019-ல் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரிடம் தோல்வி அடைந்தார். இந்த முறையும் பொன்.ராதாகிருஷ்ணன் வாய்ப்பு கேட்டுள்ளார். 1989-ல் முதல் முதலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தியும் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டு வருவதாகக் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலங்கானா - புதுச்சேரி ஆளுநராக இருக்கிறார். அவரும் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். பாஜக சார்பில் யார் வென்றாலும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் கன்னியாகுமரியில் போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்