5% தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச்சின்னம் கிடைக்கும்: தேர்தல் ஆணையத்தின் விதிமுறையால் சிறிய கட்சிகளுக்கு சிக்கல்

By கி.கணேஷ்

மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனி பொதுச்சின்னம் வழங்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறையால், சிறிய கட்சிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டன. தற்போதைய சூழலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை தொடங்க காத்திருக்கின்றன. இவைதவிர அமமுக, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சியானது அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இந்த தேர்தலில் அதிமுக 170 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. எனவே, மீதமுள்ள 64 தொகுதிகளில் பாஜகவுக்கு 25, பாமகவுக்கு 21 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் திமுகவும் 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால், மீதமுள்ள 64 தொகுதிகள் காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதில் மாநிலத்தில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளில் 5 சதவீதம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிக்கே தனி பொதுச்சின்னம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 40 தொகுதிகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மாநிலங்களில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கே தனிச்சின்னம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை தனிச்சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டியிடும்போது எண்ணிக்கை குறைந்தால் சின்னம் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அடிப்படையில் தமிழகத்தில் குறைந்த பட்சம் 12 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிக்கே தனிச்சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. சின்னம் தொடர்பான ஆணையத்தின் இந்த விதியால் தற்போது அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் சிலவற்றுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் உருவானது. சமாஜ்வாடி கட்சிக்கு உத்தரபிரதேத்தில் பொதுச் சின்னமாக சைக்கிள் ஒதுக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். அக்கட்சி சார்பில் தமிழகத்தில் இருவர் போட்டியிட்டதால், தமாகா ஆட்டோ சின்னத்தில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் சைக்கிள் சின்னம் தமாகாவுக்கு கிடைக்க வாய்ப்பிருந்தாலும், போட்டியிடும் தொகுதிகள் அடிப்படையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபேன்று, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், அக்கட்சிகளுக்கு தனி பொதுச் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால், இரண்டு பிரதான கட்சிகளோடு கூட்டணியில் உள்ள சிறியக் கட்சிகள் அதிமுக அல்லது திமுகவின் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் சிறிய கட்சிகள் தற்போது தவித்து வருகின்றன.

15 கட்சிகளுக்கு தனிச்சின்னம் ஒதுக்கீடு

கடந்த ஜனவரி 23 முதல் பிப் 12 வரை தமிழகத்தில் போட்டியிட 15 அரசியல் கட்சிகளுக்கு தனி பொதுச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தெரிவித்து பல்வேறு கட்சிகள் பொது சின்னத்தை பெற்றுள்ளன.

மக்கள் சக்தி கட்சிக்கு- விசில், தமிழக மக்கள் தனியுரிமை கட்சி - வைரம், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சிக்கழகம் - செருப்புகள், அகிம்சா சோஷியலிஸ்ட் பார்ட்டி - பேட்ஸ்மேன், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி - மைக், புதிய தலைமுறை மக்கள் கட்சி - பானை, தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம்- தென்னந்தோப்பு, மக்கள் நீதி கட்சி இந்தியா - கொம்புவாத்தியம் ஊதுதல், தென்னிந்திய பார்வேர்டு பிளாக் - பரிசு பெட்டகம் ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும். மக்கள் மசோதா கட்சி- கால்பந்து விளையாட்டு வீரர், அனைத்து மக்கள் புரட்சி கட்சி- கண்ணாடி டம்ளர், பாரதிய பஞ்சாயத்திராஜ் பார்ட்டி (லோக் தந்த்ரிக்) - பேனா நிப் மற்றும் 7 அலைகள், கோகுல மக்கள் கட்சி - புல்லாங்குழல், ஸ்வதந்திரா பார்ட்டி - முக்கோணம், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி- உரலும் குழவியும் என 15 கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த கட்சிகள் 5 சதவீதம் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதியை பூர்த்தி செய்யாத பட்சத்தில் அந்த சின்னங்கள் அவர்கள் வேட்பாளர்களுக்கு கிடைக்காது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

தேர்தல் 2021

3 years ago

மேலும்