அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடுவது செல்லாது, என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ்ஸின் ஆரம்பகால தீவிர ஆதரவாளர், எம்ஜிஆர் காலத்திலேயே இளைய வயதிலேயே பெரிய பொறுப்பில் வந்தவர் என பன்முகத்தன்மைக்கொண்ட மூத்த அரசியல் பிரமுகர் கே.சி.பழனிச்சாமி அதிமுக தலைமையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.
பொதுச்செயலாளர் மட்டுமே வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடவேண்டும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கட்சி விதிப்படி செல்லாது என அவர் போட்ட வழக்கு விசாரணைக்கு இன்று வர உள்ளது.
இதில் நீதிமன்றம் எடுக்கும் முடிவு அதிமுக தலைமைக்கு சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கே.சி. பழனிச்சாமியிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடைகோரும் மனு விசாரணைக்கு எந்தநிலையில் உள்ளது?
சமீபத்தில் இரட்டை இலை வழக்கில் சசிகலா தினகரன், நீதிபதி தீர்ப்பில் சில விஷயங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது தீர்ப்பில், ''பத்தி 51, 52- ல் தீர்ப்பில் சசிகலா பொதுக்குழுவில் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது தவறு, அதேபோல ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் விதிகளைத் திருத்தி அடிப்படை உறுப்பினர்களின் வாக்கு உரிமையைப் பறித்தது தவறு.
எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வழிநடத்திய அந்தப் பிரிவு 43 அடிப்படை உறுப்பினர்களால் தான் அந்தக் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது. ஆனால் இவர்கள் விதியைத் திருத்திக் கொண்டு வந்துள்ள மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு தலைவர் இல்லை என்றால் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இந்தக் கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பது பைலாவில் தெளிவாக உள்ளது. இது எனது முதன்மையான கண்டுபிடிப்பு. அதனால் சசிகலாவும் தினகரனும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் உள்ளவர்களும் குற்றவாளிகள்'' என நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு பிப்ரவரி 22-ம் தேதி வந்தது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட முடியாது. அந்த விதிகளில் திருத்தம் செல்லாது.
இதற்கு மாற்று வழி என்ன?
நான் என்ன சொல்கிறேன் என்றால் ஓபிஎஸ் பொருளாளர் என்று கையெழுத்து போட வேண்டும். ஈபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர் என்று கையெழுத்து போடட்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மூன்று மாதத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தட்டும்.
இணையத்தில் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது அல்லவா? அதை தடை செய்ய வேண்டும். இதைத்தான் நான் கேட்டுள்ளேன். குறைந்தபட்சம் வேட்பாளர்களின் படிவத்தில் இவர்கள் கையெழுத்திடுவது குறித்தாவது இன்று முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
அப்படியானால் ஓபிஎஸ் பொருளாளர் என்றும் ஈபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர் என்றும் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட்டால் அது செல்லுமா?
தாராளமாகச் செல்லும். அதற்கு நானே ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளேன். எனக்கு தனிப்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றும் பிரச்சனை இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய அந்த விதிகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கிய அந்த விதிகள் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு அந்த வாக்களிக்கும் உரிமையைத் தர வேண்டும் என்பதே என்னுடைய அடிப்படை கோரிக்கையாகும்.
பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் என்பதை மட்டும் அவர்கள் ஒப்புக்கொள்வார்களா?
நேற்று கூட்டத்தில் தொகுதிப் பட்டியலை ஒபிஎஸ் அறிவித்தார் அல்லவா? அதிலும், வேட்பாளர்கள் பட்டியலை அறிக்கையாக வெளியிட்டார்கள். அதில் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என்றும் முதன்முறையாகக் குறிப்பிடுகிறார்கள். இதற்குக் காரணம் நான் போட்ட வழக்குதான்.
ஓபிஎஸ் பொருளாளராகவும், ஈபிஎஸ் தலைமை நிலையச் செயலாளராகவும் செயல்படுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. என்னுடைய கோரிக்கை அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இந்தக் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே.
தலைமைச் செயலகத்தில் நீங்கள், முதல்வரைச் சந்தித்தது அதிமுகவில் சேர வேண்டும் என்பதற்காகதான் என்கிறார்களே?
சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள், சந்தித்தேன். அவ்வளவுதான். கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். சரி என்றேன். ஆனால் நான் ஆரம்பத்தில் வைத்த கோரிக்கையான முதன் முதலில் தர்ம யுத்தம் என்ற பெயரில் ஓபிஎஸ் எதற்காகப் போராடினாரோ அதை அடகு வைக்க நான் விரும்பவில்லை.
பிறகு ஏன் நீங்கள் அதிமுகவில் சேரவில்லை?
அதை அவர்கள்தானே அறிவிக்க வேண்டும்.
நீங்கள் சந்தித்தது கட்சியில் சேருவதற்காக அல்ல தொகுதி பிரச்சினை கோரிக்கைக்காக என்கிறார்களே?
நான் எந்தத் தொகுதி சம்பந்தமாகவும் பேசவில்லை. அன்று மாலையே செய்தியாளர்கள் கூட்டத்திலேயே சொன்னேன். அவர்களும் என்னிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, நானும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. நான் என்ன கோரிக்கை மனு கொடுத்து இருந்தேன் என்ன கோரிக்கை வைத்தேன் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
அப்படியானால் முழுக்க முழுக்க அதிமுகவில் சேர்வதற்காகதான் அழைத்தார்கள். அப்படித்தானே?
அழைத்தார்கள், சென்றேன். அவர்கள் ஒன்றும் எனக்கு விரோதிகள் இல்லை. ஒரு முதல்வரும், துணை முதல்வரும் கொஞ்சம் வர முடியுமா? உங்களிடம் பேச வேண்டும் என்று அழைக்கிறார்கள். எல்லோரும் ஒரே கட்சியில் இருக்கிறோம். எங்களுக்குள்ளே ஒரு கருத்து மாறுபாடு உள்ளதே தவிர தனிப்பட்ட விரோதம் இல்லையே? நிச்சயமாகச் சந்திக்க வேண்டும். பேச வேண்டும். அப்போது தானே பிரச்சனை தீரும். அந்த அடிப்படையில்தான் சென்றேன்.
கண்ணப்பன் விவகாரத்தில் என்ன பிரச்சினை? ஓபிஎஸ்ஸை நம்பித்தானே சென்றார்?
ஆரம்பத்தில் கண்ணப்பனிடம் பேசி ஓபிஎஸ்ஸிடம் அழைத்துச் சென்றது நான்தான். ஸ்டாலின் திமுகவில் அனைவரையும் அரவணைத்து கட்சியைக் கொண்டு செல்கிறார். ஆனால் அதிமுகவில் இந்தத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தீர்கள், அவரை நம்பி வந்தோம் என்கிற வருத்தம் உங்களுக்கு உண்டா?
நிச்சயமாக இருக்கிறது, நான் மட்டுமல்ல கண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இதில் பலன் அடைந்தது ஓபிஎஸ், கே.பி. முனுசாமி, பி.எச். பாண்டியன் மட்டும்தான்.
இன்றைய வழக்கு எப்படி இருக்கும்?
மாலை நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். நாம் சொல்வதை சொல்லி இருக்கிறோம். இவர்கள் அதை உணர்ந்து நாங்கள் பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் என்று கையெழுத்து போட்டுக் கொள்கிறோம் என்று சொன்னால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago