நலத்திட்டங்களை பட்டியலிட்டு பிரதமர் பேசியதால் அதிருப்தியில் உள்ள குமரி மீனவர்கள்: மக்களவை தேர்தலில் ஆதரவு அளிப்பார்களா?

By என்.சுவாமிநாதன்

எல்லையில் போர்மேகம் சூழ்ந்திருந்த நிலையில் பிரதமரின் குமரி வருகை ரத்து என்று தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் இத்தகவல் பரவியதை தொடர்ந்து, பாஜகவின் ஊடகப்பிரிவு அதை மறுத்து அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் விமானி அபிநந்தன் விடுதலை தொடர்பான தொடர் பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று குமரிக்கு வந்தார் பிரதமர் மோடி.

நடந்துமுடிந்த பணிகளை தொடங்கி வைப்பது, புதிய பணிகளுக்கு அடிக்கல் என அரசுவிழா, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடையேறும் அரசியல் கூட்டம் என இரு நிகழ்ச்சிகளாக பிரதமரின் வருகை திட்டமிடப்பட்டு இருந்தது. இரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனியே இரு மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால்கடைசியில் அரசியல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. என்றாலும் அரசு விழாவிலேயே அரசியல் பேசிய பிரதமர் மோடி முந்தைய ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

கடந்த 2015-ல் சுசீந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அன்றைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பாஜகவினரும் அதிமுகவினரும் விழா மேடையிலேயே மோதிக்கொண்ட சம்பவமும் அரங்கேறியது.

பாஜகவினர் பிரதமர் மோடிக்கும், அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவு கோஷம் போட்டு பரபரப்பாக்கினர். ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியதை இந்த விழாவில் காணமுடிந்தது. மோடியின் பெயரைச் சொல்லும் போதெல்லாம் அதிமுகவினர் உற்சாகமாகக் கைதட்டி அவரை குளிரவைத்தனர்.

முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடியை, பொதுப்பிரிவினர் சந்தித்து, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.

கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் தமிழகத்துக்கு கொண்டு வந்த எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டினார். மேலும் அதிமுக ஆட்சியில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்பட்டிணத்தில் மீன்பிடித் துறைமுகங்கள், சின்னத்துறையில் கடலரிப்பு தடுப்புச் சுவர் சீரமைப்பு, சுறாமீன் பிடிப்பு குழுக்களுக்கு செயற்கைக்கோள் கருவிவழங்கியது, ஒக்கி புயலுக்கு பலியான 204 மீனவர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் இழப்பீடு வழங்கியது என மீனவர்களுக்கு அதிமுக அரசு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார். கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கைவைத்து தனது உரையை முடித்தார்.

குமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைக்க மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புஇருந்தது. இதனால் இந்த துறைமுகம் மணக்குடி பகுதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. துறைமுக விவகாரத்தில் குமரி மாவட்ட மீனவர்கள் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இப்படியான சூழ்நிலையில் மீனவர்களுக்கு அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை முதல்வர் விளக்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக சாடினார். ஆனால் அவரும் மீனவர்கள் குறித்து பேசத் தவறவில்லை.

“மீனவர்களுக்கு தனி இலாகா அமைத்துள்ளோம். விவசாயக் கடன் அட்டை திட்டத்தை மீனவப் பெண்களுக்கும் நீட்டித்துள்ளோம். மீன்பிடி தகவல்கள், கடல் காலநிலை தகவல்களை உள்ளூர் மொழியிலும் தெரிவிக்க வசதி செய்துள்ளோம். 2014ல் இருந்து இதுவரை 1900 மீனவர்களை இலங்கை வசமிருந்து மீட்டுள்ளோம்” என பட்டியல் படித்தார் மோடி.

குமரி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவ வாக்குகள் உள்ளன. துறைமுக விவகாரத்தில் முற்றாக பாஜகவுக்கு எதிராக இந்த வாக்குகள் உள்ளன. இந்நிலையில் முதல்வர் மற்றும் பிரதமரின் மீனவர் நலத்திட்ட பேச்சுக்கு பிறகு, இந்த வாக்குகள் ஆளும் கூட்டணி வேட்பாளருக்கு சாதகமாக மாறுமா என்பது போக, போகத்தான் தெரியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்