குமரியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வர்த்தக துறைமுக ஆதரவு, எதிர்ப்பு வாக்குகள்: வேட்பாளர்களின் பிரச்சாரத்திலும் முக்கிய இடம்

By எல்.மோகன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வர்த்தக துறைமுக ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளே, வாக்கு வங்கியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளன. போட்டியிடும் வேட்பாளர்களும் துறைமுக திட்டத்தை மையமாக வைத்தே வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

கோடை வெயிலுக்கு மத்தியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக வேட்பாளர் பொன், ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளரான எச்.வசந்தகுமார், அமமுக வேட்பாளர் இ.லெட்சுமணன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதியை தக்கவைத்து கொள்ளும் வகையில் பொன் ராதாகிருஷ்ணனும், கடந்த முறை பொன் ராதாகிருஷ்ணனிடம் அடைந்த தோல்விக்கு நிகர் செய்யும் வகையில் தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் வசந்தகுமாரும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

துறைமுக திட்டம்வேட்பாளர்களின் பிரதான வாக்குறுதிகள் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுக திட்டத்தை மையமாக வைத்தே உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக வர்த்தக துறைமுக திட்டத்துக்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேவேளை, துறைமுக திட்டத்தை நிறைவேற்றியேயாக வேண்டும் என மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் முன் இரு தரப்பினரும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் மக்களைத் திரட்டி போராட்டத்தை நடத்தினர். தேர்தல் அறிவிப்புக்கு முன் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, துறைமுக திட்டம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துறைமுகம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை.

அதையடுத்த சில நாட்களில், கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைவதற்கான நிறுவனத்தை பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தனது வாக்குறுதியின் முக்கிய அங்கமாக வர்த்தக துறைமுக சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைந்தே தீரும் என்பதை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறார்.

பொன். ராதாகிருஷ்ணனின் பிரச்சாரம், மாவட்டத்தில் மத்திய பகுதி, கிராம பகுதி மக்களிடையே ஆதரவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கடற்கரை மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எதிர்ப்புகாங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பிரச்சாரம் தொடங்கியபோது, `சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை தடுத்து நிறுத்துவதுதான் எனது முதல் பணி. குமரி மாவட்டத்துக்கு இது போன்ற துறைமுகம் தேவையில்லை. மீன்பிடி துறைமுகம் அமைப்போம்’ என்றார். வசந்தகுமாரின் இந்த வாக்குறுதி கடலோர பகுதி மீனவ மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் துறைமுக ஆதரவாளர்கள் இக்கருத்தை எதிர்த்து வருகின்றனர்.

அமமுகவின் வியூகம்இதே வியூகத்தைதான் அமமுக வேட்பாளர் லெட்சுமணனும் மேற்கொண்டு ள்ளார். `கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் கூட அமைக்காமல் இதுவரை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏமாற்றி வருகின்றனர். எனவே, குமரி கடற்கரையில் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி கொடுப்பேன். மீனவர்களை பாதிக்கும் சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தை தடுத்து நிறுத்துவேன்’ என வாக்குறுதி அளித்துள்ளார்.

வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் துறைமுகம் குறித்த கருத்தே ஒலித்துக் கொண்டிருக்கிறது. குமரியில் வர்த்தக துறைமுகத்தை மையப்படுத்தியே வாக்குறுதிகளும், வாக்குகளும் சுழன்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்