முடியாட்சி காலத்திலேயே மக்களாட்சி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய சோழர்கள் வாழ்ந்த பூமி தஞ்சாவூர். சோழர்களின் கட்டிடக் கலைக்கு இன்னும் எடுத்துக்காட்டாகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது பெரிய கோயில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பாசன முறைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று திட்டமிட்டு கரிகாலற்சோழன் கட்டிய கல்லணை இதன் சிறப்புகளில் ஒன்று. தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் நகரம். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி, தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
பொருளாதாரத்தின் திசை: விவசாயமே பிரதானம். நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, சோளம், பருத்தி ஆகியவை பயிரிடப்படுகின்றன. குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆறுகளும் பம்புசெட்டுகளும் நிறைந்த தொகுதி இது. வல்லம், திருவோணம் பகுதிகளைத் தவிர மீதமுள்ள எல்லா இடங்களிலும் ஆற்றுப்பாசனம்தான். இங்கு விவசாயத்தைச் சார்ந்துதான் இதரத் தொழில்களும் இயங்குகின்றன. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம், மன்னார்குடி பாமினி உரத் தொழிற்சாலை, தஞ்சாவூரில் சிட்கோ போன்றவை இங்கு உண்டு.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: தமிழகத்தின் உணவுத் தேவைக்கு ஆதாரமாக இருக்கும் காவிரிப் படுகை விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். தண்ணீர்ப் பற்றாக்குறை பிரதானப் பிரச்சினை. மன்னார்குடியை மையமாக வைத்து 690 சதுர கிலோமீட்டரில் காவிரிப் படுகையில் உள்ள மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட எண்ணெய் வளங்களை எடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவரும் நிலையில், அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள்.
விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலான தொழிற்சாலைகள் இல்லாமல் இருப்பது இன்னொரு பிரச்சினை. வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு காகித உற்பத்தித் தொழிற்சாலை வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் உள்ள தென்னை விவசாயத்தை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குரல்கள் ஒலிக்கின்றன.
நீண்டகாலக் கோரிக்கைகள்: மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையேயான புதிய ரயில் பாதை, பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதைத் திட்டம், தஞ்சாவூர் – நாகை இடையே தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. வடுவூர் பறவைகள் சரணாலயம் உள்ள ஏரியை முழுமையாகத் தூர்வார வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வேளாண்மை விளைப்பொருட்களுக்குக் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மையம் தேவை; ஆறுகள், ஏரிகள், குளங்களை முறையாக, முழுமையாகத் தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். மல்லிப்பட்டினம் பகுதியில் மீனவர்களுக்காகக் கடல் வளத்தை மேம்படுத்தவும், தென்னை விவசாயத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சுவாரஸ்யம்: நெருக்கடிநிலைக்குப் பிறகு ஆட்சியை இழந்த இந்திரா காந்தி, தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்தார். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வந்த சமயம் அது. அந்தத் தொகுதியில் இந்திரா நின்றால் எம்ஜிஆர் ஆதரவுடன் வென்றுவிடலாம் என்பது காங்கிரஸாரின் கணக்கு. இந்திரா காந்திக்கும் விருப்பம் இருந்தது. என்றாலும் வெளிப்படையாகக் கேட்கவில்லை. இதற்கிடையே, பிரதமர் மொரார்ஜியிடமிருந்து வந்த ஒரு தூதுவர் எம்ஜிஆரைச் சந்தித்தார். சில நாட்களில், “தஞ்சாவூரில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அதிமுக ஆதரிக்கும் நிலை இருக்காது” என்று அறிவித்துவிட்டார் எம்ஜிஆர். அரசியல் கணக்குகளே தனி ஆயிற்றே!
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இந்தத் தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக முக்குலத்தோரும், பட்டியலினச் சமூகத்தினரும் உள்ளனர். முத்தரையர்கள், செளராஷ்டிரா சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் தொகுதி இது.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: பழமைவாய்ந்த இந்தத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் ஒன்பது முறை வெற்றிபெற்றிருக்கிறது. திமுக ஏழு முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளன. பெரும்பாலும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த முறை திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் மூவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 14,39,768
ஆண்கள் 7,02,396
பெண்கள் 7,37,276
மூன்றாம் பாலினத்தவர்கள்: 96
மக்கள்தொகை எப்படி?
மொத்தம் 24,05,890
ஆண்கள் 11,82,416
பெண்கள் 12,23,474
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள் 86%
முஸ்லிம்கள்: 7%
கிறிஸ்தவர்கள்: 5%
பிற சமூகத்தினர்: 2%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 91.48%
ஆண்கள் 94.97%
பெண்கள் 88.14%
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago