மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளைப் புறக்கணித்து விட்டு தேர்தலில் வெற்றியோ, அல்லது பொதுமக்களிடம் பிணைப்பையோ அரசியல் கட்சிகள் இனி பெற முடியாது என்ற நிலை கடந்த காலங்களை விட இப்போது அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.
தங்களின் வாழ்வாதாரங்களைக் காப்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிக விழிப்புணர்வும், போராட்டங்களும், சுற்றுச்சூழல் இயக்கங்களின் பங்களிப்பும் இத்தகைய நிலை ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
தேர்தல் காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகள் இந்திய அளவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பலவற்றைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுச்சூழல் சார்ந்து இரு கட்சிகளுமே இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
நீர் மேலாண்மை, கடல்வளப் பாதுகாப்பு, மீனவர்கள் நலன், சூரியமின்சக்தி குறித்த திட்டங்கள், டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலங்களாக அறிவித்தல் என இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இருந்தாலும், அணு சக்தி குறித்த மறைமுக ஆதரவு, தண்ணீர் பிரச்சினைகளுக்கு நதிநீர் இணைப்பு ஒன்றே நிரந்தர தீர்வு என முன்வைத்தல், காலநிலை மாற்றம் குறித்த தொலைநோக்கிலான கொள்கைகள், மரபு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் பயிர்கள் குறித்த நிலைப்பாடு இல்லாதது, பிரம்மாண்டமான திட்டங்கள் உள்ளிட்டவை ஏமாற்றத்தக்கதாக உள்ளன. இரு கட்சிகளின் அறிக்கைகள் குறித்தும் ஓர் அலசல்.
நதிநீர் மேலாண்மை:
கூட்டுக் குடிநீர்த் தொகுப்புத் திட்டம், பாலாறு - தென் பெண்ணை ஆறுகளில் தடுப்பணைகள் உள்ளிட்டவற்றை திமுக முன்னெடுக்கும் என்றிருப்பது, சிறிய அளவில் உள்ளூரளவிலான நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
நீர்நிலைகளை மீட்டெடுக்க ஏற்கெனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம்' போன்று, இந்திய அளவில் சட்டம் கொண்டு வரப்படும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் செயல்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் மூலம் நீர் மேலாண்மைக்கு திமுக அதிக கவனம் செலுத்தியிருக்கிறது.
ஆனால், கடற்கரை நகர்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக கூறியுள்ளது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகம். மேலும், அந்தத் திட்டம் செலவுகரமானதும் கூட. அதை எல்லா கடற்கரை பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது சூழலியல் சீர்கேடுகளை அதிகரிக்கும்.
அதேபோன்று, அதிமுக தடுப்பணைகள், இணைப்புக் கால்வாய் திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறியுள்ளது.
நீர் மேலாண்மை என்று வரும்போது திமுக, அதிமுக இரு கட்சிகளுமே நதிநீர் இணைப்பை நிரந்தரத் தீர்வாக முன்வைத்திருக்கிறது. இதன் சூழல் பாதிப்புகள், சாத்தியமின்மை, அதிகமான நிதி செலவு குறித்து பரவலாக பேசப்படும் நிலையில் ஏன் இதனை இரு கட்சிகளும் முன்னெடுப்பதற்கான நடைமுறைச் சாத்தியம் உள்ளதா?
"தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் போது அத்தகைய பிரம்மாண்டமான, கவர்ச்சிகர திட்டங்களை சொல்ல வேண்டும் என்பது அரசியல் கட்சிகளுக்கு அவசியமாகிறது", என 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுகிறார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவோம்
அடுத்ததாக சூழலை நாசமாக்கும், கடந்த காலத்தில் மக்கள் எதிர்ப்புகளைச் சந்தித்த பல்வேறு திட்டங்களைக் கைவிடுவோம் என்று திமுக அறிவித்துள்ளதை சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர் என டெல்டா பகுதிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாகக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தும் என திமுக அறிவித்துள்ளது. அதேபோன்று, சூழல் அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கையும், தேனி பொட்டிபுர மக்கள் எதிர்த்துவரும் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் எனவும் திமுக அறிவித்துள்ளது. அத்தகைய அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இல்லை.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும், காவிரி பாசனப் பகுதி சிறப்பு வேளாண் அறிவிக்கப்படுவதற்கு ஏற்ற வகையில், சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தகுந்த மாற்றமாகும்.
அணு உலைகள் குறித்த ஆதரவு நிலைப்பாடு
அதிமுக, திமுக இரு கட்சிகளும் அணுமின் திட்டங்களை நேரடியாக ஆதரிக்கவோ அல்லது புதிய அணு உலைகளைக் கொண்டு வருவோம் என்றோ கூறவில்லை. இது, கூடங்குளம் மக்களின் அணு உலைகளுக்கு எதிரான நீண்ட காலப் போராட்டத்தின் வெற்றியாகவும், அணுசக்திக்கு எதிரான நிலைப்பாடு பெருகியுள்ளதையுமே காட்டுகிறது. இருந்தாலும் இரு கட்சிகளும் அணுசக்திக்கு மறைமுக ஆதரவை அளித்துள்ளது.
மக்களின் ஒருமித்த ஒப்புதலைப் பெற்ற பின்பே சம்பந்தப்பட்ட பகுதியில் அணு மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களது கொள்கை எனவும், அதனால் உற்பத்தியாகும் மின்சாரம், அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலத்திற்குள்ளேயே பகிர்ந்தளிக்கப்படும் வகையில் புதிய கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும் திமுக கூறியுள்ளது.
ஆனால், அப்படி மக்கள் ஒப்புதலைப் பெற்று அணுமின் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூட அதிமுக சொல்லவில்லை. மாறாக, அதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறது.
"அணு உலை வேண்டும் என எந்தக் கட்சியாலும் இன்றைக்கு சொல்ல முடியாது. புதிய அணு உலைகள் கொண்டு வருவோம் என கூற கட்சிகள் தயாராக இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. கூடங்குளம் அணு உலை போராட்ட மக்களின் வெற்றியாகத் தான் இதனைப் பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நிகழ்ந்து, அரசு ஸ்தம்பித்திருந்தால் அதற்கு எதிரான நிலைப்பாட்டை முழுமையாக எடுத்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகியுள்ளது. மக்களின் கருத்தை மீறி அணுமின் திட்டங்கள் வரக்கூடாது என்ற நிலைப்பாடு உண்மையில் மாற்றம் தான்" என்கிறார், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
கடல் பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் நலன்
திமுக, அதிமுக இரு கட்சிகளும் தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் என கூறியுள்ளது. மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும் என திமுக கூறியுள்ளது, மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையை உள்வாங்கியுள்ளதை அறியலாம். இயற்கைச் சீற்றத்திலிருந்து கடலோரச் சமுதாயத்தினரை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும், கடலோரப் பகுதிகளில் நெருக்கடி மேலாண்மை மையங்கள் அமைக்கப்படும் என திமுக கூறியிருப்பது 'ஓகி' போன்ற கடந்த கால பேரிடர்களை மனதில் வைத்து தயாரித்திருப்பதை அறிய முடிகிறது.
ஆனால், இத்தகைய அறிவிப்புகளோ, சிறு மீனவர்களுக்கான திட்டங்களோ அதிமுகவின் அறிக்கையில் இல்லை.
"மணலிசாலை - திருவொற்றியூர் சந்திப்பிற்கு கடல்வழியாக மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக கூறியுள்ளது மோசமான திட்டமாகும், இதேபோன்று மும்பையில் உள்ள திட்டத்தினை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்தத் திட்டம் வந்தால், மக்கள் எதிர்வினையாற்றுவர், கடல் என்பது மனிதர்களுக்கானது அல்ல. அதேபோன்று இரு கட்சிகளும் துறைமுகங்களுக்கு பெரும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. துறைமுகங்கள் உண்மையில் நல்லதா, சூழலுக்கு ஏற்றதா என்ற கேள்வி எழுகிறது" என்கிறார், சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.
காலநிலை மாற்றம்:
மனித குலத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருமாறியுள்ள காலநிலை மாற்றம் குறித்து இரு கட்சிகளுமே தனியாக கொள்கைகளோ, திட்டங்களோ வகுக்கவில்லை என்பது ஏமாற்றம். காலநிலை மாற்ற விளைவுகளால் உணவு உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் என மத்திய வேளாண் துறை அமைச்சகமே எச்சரித்துள்ள நிலையில், அதனைக் கருத்தில்கொண்டு விவசாயத்தை முன்னெடுப்பது குறித்த அறிவிப்புகள் இல்லை.
"கஜா போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது நிவாரணம் குறித்து மட்டுமே அரசுகளும் கட்சிகளும் சிந்திக்கின்றன. அதுகுறித்த கொள்கைகள் வகுப்பதில் சிந்தனை செலுத்துவதில்லை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு அமைப்புகளை தயார்படுத்துவோம் என பிரதான கட்சிகள் சொல்லியிருக்க வேண்டும்", என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
ராணுவத் தளவாடங்கள்
ராணுவத் தளவாட தொழில்கள் நெடுவழித் திட்டத்தை முன்வைத்து செயல்பட மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என கூறியிருக்கிறது.
"சேலம் எட்டுவழிச்சாலையையும் பாதுகாப்பு தளவாடத்தையும் தனியாகப் பார்க்கின்றனர். ராணுவ தளவாடங்களை திமுக எதிர்க்காதது வருத்தமளிக்கிறது. ராணுவ தளவாடத்துக்கு இன்னும் மக்கள் பெரும்பான்மையானோர் எதிர்க்காததால், அதனை திமுக ஆதரிக்கிறது. பிரச்சினை சார்ந்து மட்டுமே திமுக பார்த்துள்ளது. ஆனால், மாற்றுப் பொருளாதாரம், நிலைத்த பொருளாதாரத்தில் திமுக கவனம் செலுத்தவில்லை", என்கிறார் வெற்றிச்செல்வன்.
இவை தவிர சூரிய மின்சக்தி திட்டங்களிலும் சிறியளவில் கூரை சூரிய மின்சக்தி திட்டங்கள், வீடுகளில் சூரிய மின்சக்தி ஆகியவற்றை இரு கட்சிகளும் சொல்லவில்லை. மாறாக, பெரிய அளவிலான, நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டங்களை வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளன.
நீர், நிலம், காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றுக்கும் கொள்கைகளை வகுக்காமல் பொத்தம்பொதுவான வழிமுறைகளைக் கூறியுள்ளன. உதாரணத்திற்கு ஆற்றில் ஆலைக் கழிகளை அகற்றுதல் உள்ளிட்ட பழைய, மேம்போக்கான தீர்வுகளை அதிமுக முன்வைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்துப் பேசிய நித்யானந்த் ஜெயராமன், "திமுக தேர்தல் அறிக்கைக்கு நிறைய கவனம் செலுத்தியிருக்கிறது, நுணுக்கமான விஷயங்களைக் கவனித்து வடிவமைத்திருக்கின்றனர். சூழல், விவசாயிகள் குறித்த புரிதல் திமுகவிடம் அதிகம் உள்ளது. மக்களின் எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நியாயமான காரணங்களுக்காக பல திட்டங்களைக் கைவிடுவோம் என அறிவித்துள்ளது.
அதிமுக அவசரம் அவசரமாக எழுதியது போன்று உள்ளது. அதிமுகவினர் பிளாஸ்டிக் ஒழிப்பைப் பாராட்டியுள்ளனர். ஆனால், பிளாஸ்டிக் தடை தமிழகத்தில் மிக மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் எல்லாமே பிரம்மாண்டமான வாக்குறுதிகள் தான். மெகா உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவித்திருப்பது, மீண்டும் வேதி உரங்களுக்கு மானியங்கள் அளிப்பதை முன்னெடுப்பதாக உள்ளது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அதிமுகவுக்குத் தெரியவில்லை. கூவத்தை தேம்ஸ் நதியாக மாற்றுவோம் என அதிமுக கூறியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது" என்றார், நித்யானந்த்.
சூழலியல் பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தும் எனக்கூறிய நித்யானந்த், "ஸ்டெர்லைட் ஆலை, காப்பர் ஆலைகள் குறித்த எதிர்ப்பு இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் கண்ணில் படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டை விட வேறென்ன பெரிய பிரச்சினை இருக்கிறது? கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக முனையம் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை உள்ளிட்டவை அந்தந்த மாவட்ட மக்களின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. திமுக எட்டு வழிச்சாலை குறித்த எதிர்ப்பை கவனமாகப் பதிவு செய்துள்ளது. இது தேர்தலில் வாக்காளர்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தும்" என்றார்.
தேர்தல் காலங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கவனம் பெறுவது குறித்து பேசிய வெற்றிச்செல்வன், "கடந்த 10 ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டோமேயானால், இந்திய அளவில் தேசியக் கட்சிகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராததைக் காணலாம். முன்பெல்லாம் தேர்தல் காலங்களில், தமிழகத்தில் காவிரி வாழ்வாதாரம் மட்டுமே பிரச்சினையாகப் பார்க்கப்படும். விவசாயிகள் பிரச்சினைகளைக் கூட வாழ்வாதார பிரச்சினையாகத் தான் பார்க்கப்படுமே தவிர, சூழல் பிரச்சினையாகப் பார்க்கப்படாது. இன்றைக்கு அதில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அது, மக்கள் போராட்டங்கள், சூழலியல் இயக்கங்கள் இவற்றின் புறச்சூழலால் விளைந்தவை" என்றார் வெற்றிச்செல்வன்.
சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தேர்தல் காலத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், அடுத்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக கட்சிகள், தாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago