‘மூத்த’ அரசியல்வாதி என்ற சொற்பதத்துக்கு முழுமையான தகுதி பெற்றவர் 101 வயதாகும் எஸ்.கே.பரமசிவன். பால் கூட்டுறவு சங்கம் மூலம் கொங்கு மண்டலத்தில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். 1962 - 1967 வரையிலான காலகட்டத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக பணியாற்றியவர். ஈரோடு ஆவினின் ஸ்தாபகர். முன்னாள் எம்.பி.க்களில் தேசிய அளவில் ‘சூப்பர் சீனியர்’.
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்கேபியின் அரசியல் வாழ்வு, பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டிய பொக்கிஷம் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள். தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், எஸ்கேபியை சந்தித்தோம்.
‘காங்கிரஸ்’ என்று சொல்லும்போதெல்லாம், அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம்! சராசரி அரசியல்வாதிகளுக்கே உரித்தான பூச்சு வார்த்தைகள் இன்றி, உண்மைகள் மட்டுமே வார்த்தைகளாக வருகின்றன. ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி..
முதன்முதலாக தேர்தலில் எப்போது போட்டியிட்டீர்கள்?
1962 முதல் 67 வரை ஒருமுறைஎம்.பி.யா இருந்தேன். ரெண்டாவது தடவை தோத்துட்டேன். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த திமுககாரர்தான் என்னை எதிர்த்து நின்னார். அவரு பேருகூட ஞாபகம் இல்லை.
தேர்தலில் நின்னப்ப எவ்வளவு செலவு பண்ணியிருப்பீங்க?
(யோசிக்கிறார்) மொத்தமா 20 ஆயிரம் செலவு பண்ணியிருப்பேன்.
என்ன செலவு பண்ணீங்க?
ஓட்டுக்கு காசு கொடுத்தீங்களா?எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட 5 எம்எல்ஏக்களிடம் அந்த பணத்தை பிரிச்சுக் கொடுத்தேன். அவங்கதான் செலவு பண்ணினாங்க. எனக்காக பிரச்சாரம் செய்ய சி.எஸ். (சி.சுப்பிரமணியம்) வந்தாரு.
என்ன வாக்குறுதி கொடுத்தீங்க?
வாக்குறுதி எல்லாம் யாரு கேட்டாங்க? மக்களும் வாக்குறுதி கேட்கலை.. நானும் கொடுக்கலை.
அப்போ நடந்த தேர்தலுக்கும், இப்போ நடக்கிற தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?
உலகத்திலேயே இல்லாத அநியாயம் இப்போ நடக்குது. மத்திய மோடி சர்க்காரைதான் சொல்றேன். தமிழ்நாட்டுல இருக்கிறதும், அவங்க கவர்மென்ட்தானே. மோடி அரசு என்ன நல்லது பண்ணினாங்கன்னு நீங்க சொல்லுங்க. மறைமுகமா ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது முதல் தப்பு. விவசாயிகளுக்கு கொடுக்கிறேன்னு சொல்லி, ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கிறாங்க. இது உலக மகா அக்கிரமம். இதுபோல இதுவரை நடந்ததே இல்ல.
காங்கிரஸில் நேரு, இந்திராவில் தொடங்கி ராகுல் வரை வாரிசு அரசியல் தொடர்கிறதே.. அதுபற்றி?
அது அப்படித்தான் இருக்க முடியும். வேற எதுவும் செய்ய முடியாது. கட்சியில் தலைமைப் பதவி முக்கியமானது.
முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதியுடன் பழகிய அனுபவம் உண்டா?
நல்லா பழகியிருக்கேன். நல்ல மனுஷங்க. இப்ப இருக்கிற தலைவர்களோடு ஒப்பிடும்போது, ஆயிரம் மடங்கு நல்லவங்க. யுத்தம் நடந்தப்போ, மனைவியுடன் சென்று நேருவைப் பார்த்தேன். அப்போ, என் மனைவி கையில் போட்டிருந்த தங்க வளையல்களைக் கழற்றி, யுத்த நிதிக்காக நேருகிட்ட கொடுத்தாங்க.
திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அவங்க அப்பா (கருணாநிதி) மாதிரி இருக்க முடியாது. அவங்க அப்பா பிறக்கும்போதே தலைவரா பிறந்தவர். பார்ன் லீடர் (Born Leader).
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து..
நல்லா இருந்தவங்க திடீர்னு இறந்துட்டாங்கன்னா நம்ப முடியல. அதனால, ஜெயலலிதா மரணம் குறித்து கண்டிப்பா விசாரிக்கணும். அவங்க தோழி சசிகலாகிட்ட விசாரணை பண்ணனும்.
தற்போது எந்த கூட்டணி நல்லதுன்னு நினைக்கிறீங்க?
இப்போதைய சூழலில் திமுக கூட்டணிதான் எனக்கு சரியா படுது.
‘பணம் கொடுத்தாத்தான் ஓட்டு போடுவோம்’னு மக்கள் சொல்ற நிலைமை வந்திடுச்சே..
பணம் கொடுக்கிறவன் ஜெயிப்பான்கிற நிலைமை வந்திடுச்சு. அரசுகள் செய்யும் அக்கிரமங்களை நீதித்துறையும் தட்டிக் கேட்காததுதான் வேதனையா இருக்கு.
இப்போ ஓட்டு போடப்போகும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
காசு வாங்காம ஓட்டு போடுங்க.. காங்கிரஸுக்கு போடுங்கன்னு சொல்வேன்.. என்று முடித்தார் பெரியவர் எஸ்கேபி.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago