காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்: தென் சென்னையில் குஷ்பு, கராத்தே தியாகராஜன் இடையே போட்டி?

By மு.அப்துல் முத்தலீஃப்

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இதனால் அதிமுக பலனடைந்தது. அதன் பின்னர் அதன் கள நிலவரத்தைப் புரிந்துண்ட காங்கிரஸ் பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் இணைந்தது.

அதனால் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. இதில் கன்னியாகுமரியில் மட்டும் 3 சட்டப்பேரவை தொகுதிகளை காங்கிரஸும், 3 தொகுதிகளை திமுகவும் வென்றது.

அதன் பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மற்ற கட்சிகளும் இணைந்தன. திமுக கூட்டணியில் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் தொகுதிகளைத் தேர்வு செய்வதில் அனைத்துக் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் இடங்களில் மற்ற கட்சிகளும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் சிக்கல் நீடிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்குள் துணைத் தலைவர், செயல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியிடக்கூடாது என முடிவெடுத்துள்ளதாலும், சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிக அளவில் இருப்பதாலும் காங்கிரஸுக்குள்ளேயே தொகுதிகளைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஏற்கெனவே புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுபோக தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

''காங்கிரஸ் சென்னையில் தென் சென்னை தொகுதி கேட்டுள்ளது. இங்கு முன்னர் குஷ்பு போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியான நிலையில் திடீரென டெல்லியிலிருந்து ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் போட்டியிடுகிறார் எனத் தகவல் வெளியானது. சி.ஆர்.கேசவன் போட்டியிட்டால் யார் வேலை செய்வது என்கிற கேள்வி காங்கிரஸுக்குள் எழுந்தது.

இதனிடையே ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தென் சென்னையில் நிற்க இடம் கேட்டுள்ளாராம். கராத்தே தியாகராஜன் தொகுதியில் பிரபலமானவர். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர், ரஜினிகாந்துக்கும் நெருக்கமானவர் என பல பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.

ஆனால் கராத்தே தியாகராஜன் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பதால் தொகுதி கொடுப்பதை மற்றவர்களும் ஆட்சேபிப்பார்கள்.

அடுத்த தொகுதியாக திருவள்ளூர் தொகுதியை கேட்கின்றனர். இதே தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கேட்கிறது. ஆனால் செல்வப்பெருந்தகை இந்தத் தொகுதியில் நிற்க வாய்ப்பு அதிகம் என்பதால் செல்வப்பெருந்தகையா? ரவிக்குமாரா? என்கிற போட்டி நிலவுகிறது.

அவ்வாறு திருவள்ளூர் இல்லாவிட்டால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கேட்கப்படுவதாகவும், அங்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு நிற்க வாய்ப்புள்ளதால் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று அரக்கோணம் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறது. இந்தத் தொகுதியில் நா.சே.ராமச்சந்திரன் காங்கிரஸ் சார்பில் நிற்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. செல்வாக்கு மிக்கவர் ராமச்சந்திரன் என்பதால் அரக்கோணம் காங்கிரஸுக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் போட்டியிட விருப்பமில்லையாம். அவர் ராஜ்ய சபா எம்பி சீட்டுக்கேட்டு திமுகவில் கோரிக்கை வைத்துள்ளதால் அரக்கோணத்தில் அவர் போட்டியிடும் வாய்ப்பு குறைவு.

சேலத்தில் நிற்க தங்கபாலு விரும்பாததால் கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் கள்ளக்குறிச்சியில் பாரிவேந்தர் நிற்கலாம் என்பதால் சேலத்தில் நிற்கவே வாய்ப்பு அதிகம்.

ஈரோடு தொகுதியை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக கேட்கப்பட்ட நிலையில் அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் அல்லது காஞ்சிபுரத்தை ஒதுக்கவேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்துள்ளது. ஆனால்,  மதிமுகவின் முதல் சாய்ஸ் ஈரோடு என்பதால் ஈரோடு காங்கிரஸுக்கு இல்லை என்கிறார்கள்.

அதே நேரம் ஈவிகேஎஸ்ஸை திருப்பூரில் நிற்க வைக்க உள்ளதால் திருப்பூரை காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்பு என்கின்றனர். ஒருவேளை ஈவிகேஎஸ் மறுக்கும் பட்சத்தில் திருப்பூரில் குஷ்பு நிற்க வாய்ப்புள்ளது. ஆனால் திருப்பூரை இந்திய கம்யூனிஸ்ட்டும் கேட்கிறது என்பது கூடுதல் தகவல்.

முக்கியப் போட்டியாக காங்கிரஸ் பெரிதும் எதிர்பார்த்த திருச்சி தொகுதியை மதிமுகவும் கேட்க, வைகோ அங்கு போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் இங்கு போட்டியிட உத்தேசித்திருந்த திருநாவுக்கரசருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் தொகுதியை விட்டுக்கொடுக்க திருச்சி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்து விருதுநகரில் மாணிக் தாகூர் போட்டியிட உள்ளதால் அந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் நிற்க உள்ளது. தேனி மற்றும் நெல்லையில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. நெல்லை திமுக நிற்கும் பட்சத்தில் தேனிக்கு வாய்ப்புள்ளது. இது தவிர கன்னியாகுமரி, மயிலாடுதுறையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது.

ஆரணியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பில்லை. அங்கு பாமக போட்டியிடும் என்பதால் கிருஷ்ணசாமி நிற்க விரும்பவில்லை. காரணம் உறவினர்கள் என்பதால் பிரச்சினை வரும் என கூறப்படுகிறது.

தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுக நேர்காணல் 9-ம் தேதியிலிருந்து நடப்பதால் அதன்பிறகு முடிவு செய்யப்படும்'' என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்