கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணித் தொழில் நலிவடைந்து தள்ளாடுகிறது. ஆனால், இதனை எந்த அரசியல் கட்சியினரும் கண்டுகொள்வதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் தோணி உரிமையாளர்கள்.
தோணி போக்குவரத்து
தூத்துக்குடியில் துறைமுகம் உருவாகும் வரை தோணிகள் மூலமே மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிமென்ட், பீடி இலை, மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் கொழும்பு, மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கிருந்து தேங்காய், மிளகு, தேயிலை மற்றும் பழைய இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடிக்கு வந்தன. கால மாற்றத்துக்கு ஏற்ப பாய்மரத் தோணிகள், இயந்திரம் பொருத்தப்பட்ட தோணிகளாக மாறின.
நலிவடையும் தொழில்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை தூத்துக்குடி பழைய துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு, 200 டன் முதல் 450 டன் வரை கொள்ளளவு கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தோணிகள் இயங்கின. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக சரக்கு பெட்டக கப்பல்களால் ஏற்பட்ட கடும் போட்டி, இந்திய அரசு சார்பில் எந்தவித ஆதரவும் இல்லாத நிலை, தோணிகளை பழுது பார்க்க வசதி இல்லாதது போன்ற காரணங்களால் தோணி தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது.
கட்சிகள் பாராமுகம்
கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இத்தொழிலை மீட்பதற்கு, எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. இத்தொகுதி எம்பிக்களும் மக்களவையில் குரல் கொடுப்பதில்லை. தேர்தல் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசியல் கட்சிகள், பாரம்பரிய தோணித் தொழிலை கண்டுகொள்வதில்லை என, வேதனை தெரிவிக்கின்றனர் தோணி உரிமையாளர்கள்.
தூத்துக்குடி திருமந்திரநகர் தோணி உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் எஸ்.லெசிங்டன் பெர்னாண்டோ கூறும்போது, ``தூத்துக்குடியில் தோணி பராமரிப்பு வசதி இல்லாததே இத்தொழில் நலிவடைய முக்கிய காரணம். சிறிய பழுதுகளைக் கூட சரிசெய்ய மங்களூருக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்றால் 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தினமும் வாடகை கட்டணமாக ரூ.750 கொடுக்க வேண்டும். இதனால், தோணி உரிமையாளர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.
இதன் காரணமாக சிறிய பழுது ஏற்பட்டாலும், அதனை சரி செய்யாமல் தொடர்ந்து இயக்குகின்றனர். இதனால்தான் தோணிகள் அடிக்கடி கடலில் மூழ்கி விபத்துக்களை சந்திக்கின்றன.
பழைய துறைமுகத்தில் தோணிகளை மேலே ஏற்றி பராமரிப்பு செய்வதற்கான இடவசதி இருக்கிறது. ஆனால், தோணி பராமரிப்பு கூடம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் கண்டுகொள்ளவில்லை.
இதேபோல், மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச் சென்றால் தளம் ஒதுக்க தாமதமாகிறது. 20 நாட்கள் வரை வெளியே நடுக்கடலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக தோணிக்கும், சரக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மாலத்தீவு தற்போது இந்தியாவின் நட்பு நாடாக இருப்பதால் தோணிக்கு தனித் தளம் ஒதுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலை நம்பி 5 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 10 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் உள்ளனர். இவர்களைப் பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
இம்முறை தூத்துக்குடி தொகுதியில் 2 பெரிய பெண் தலைவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களாவது எங்களது பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், என்றார் அவர்.
இருப்பது 20 தோணிகள்
40-க்கும் மேற்பட்ட தோணிகள் இருந்த தூத்துக்குடியில் தற்போது 20 தோணிகள் மட்டுமே உள்ளன. இலங்கைக்கு தோணி போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு மட்டும் 10 தோணிகள் இயக்கப்படுகின்றன. மேலும், 10 தோணிகள் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு சென்று, அங்கிருந்து லட்சத்தீவு பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago