தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தேர்தலின் கதாநாயகன் என்று வர்ணித்துள்ளார். அதிமுக-வும் தனது தேர்தல் அறிக்கையில் பல முக்கிய பிரச்சினைகளில் தங்கள் நிலையை வெளிப்படுத்தி உள்ளது.
அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் கவர்ச்சி கரமானதாக அமைந்துள்ளது. இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய நீர் மேலாண்மை திட்டங்கள் ஆகிய மாநில அரசால்கூட நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டுள்ளது. முத்தலாக் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்களை அதிமுக தேர்தல் அறிக்கை நேரடியான வார்த்தைகளால் குறிப்பிடாமல் மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் போன்ற மறைமுக வார்த்தைகளால் இலைமறை காயாகவே குறிப்பிட்டு ஒதுங்கியுள்ளது. பல விஷயங்களை அதிமுக உரத்த குரலில் தெரிவிக்காமல் பெயரளவுக்கு தொட்டுவிட்டுச் சென்றுள்ளது.
பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய சிறப்புத் திட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பழைய முறையை கொண்டு வருதல், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், நீட் தேர்வில் இருந்து விலக்கு, மீனவர் காப்பீடு, கல்விக்கடன் தள்ளுபடி, வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை, 7 தமிழர்கள் விடுதலை, நதிகள் இணைப்பு போன்ற மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் வரும் விஷயங்களை அதிமுக தேர்தல் அறிக்கை தொட்டிருந்தாலும், எதையும் வாக்குறுதியாக அளிக்காமல் மத்திய அரசிடம் கோரிக்கை மனு கொடுப்பதைப் போல நாசூக்காக ‘வலியுறுத்துவோம், கோரிக்கை விடுப்போம், முயற்சிப்போம்’ போன்ற வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
நாட்டின் மிக முக்கியமான அனைத்துப் பிரச்சினைகளையும் திமுக தேர்தல் அறிக்கை தொட்டுப் பார்த்துள்ளது. அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்தியப் பொருளாதாரத்தை மீட்க வல்லுநர் குழு அமைத்தல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல், நீட் தேர்வை ரத்து செய்தல், கல்விக்கடன் ரத்து, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ், சுங்கச்சாவடி கட்டணம் ரத்து, கல்விக்கடன் ரத்து, காவிரி டெல்டாவை பாதுகாக்க வேளாண் மண்டலம், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, வருமான வரி விலக்கை ரூ.8 லட்சமாக உயர்த்துதல், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை 150 நாளாக அதிகரித்தல், ஒரு கோடி சாலைப் பணியாளர் நியமனம், சேதுசமுத்திர திட்டம், மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை என பல வாக்குறுதிகள் நினைத்தாலே இனிக்கும் வாக்குறுதிகளாக உள்ளன.
நாட்டின் அனைத்து முக்கிய பிரச்சினைகளையும் தேர்தல் அறிக்கையில் திமுக கொண்டு வந்துள்ளது.
ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டவையாக உள்ளன. ஒரு மத்திய அரசால் மட்டுமே செய்யக்கூடிய விஷயத்தை வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் மாநிலக் கட்சியான திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால்கூட ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். அல்லது காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தால்கூட பொருத்தமாக அமையும். அதைவிடுத்து, திமுக தனித்து இத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது ஏற்கும்படியாக இல்லை. குறிப்பாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயத்தை பழைய முறைக்கு மாற்றுவோம் என்று திமுகவே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அதிகார வரம்பில் வரும் விஷயங்களை திமுக நேரடியாக அறிவித்திருப்பது விமர்சனத்துக்கு உரியதாக அமைந்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற்ற திமுக அப்போதெல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்காமல், இந்த தேர்தலில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுமா என்பது சந்தேகமே? புதிய ஓய்வூதியத் திட்டம், சுங்கச் சாவடிகள், ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறை ஆகியவற்றால் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானாலும் மத்திய அரசின் கஜானாவும், தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டும் நிரம்புவதால், இவை எந்த ஆட்சி வந்தாலும் மாறாது என்று மக்களே பேசிவரும் நிலையில், இவை எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை திமுகதான் தெளிவுபடுத்த வேண்டும்.
அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை பொதுவாக பல விஷயங்களை தொட்டிருந்தாலும், அதிமுக தங்களால் எது முடியுமோ அதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆனால், திமுக-வின் தேர்தல் அறிக்கை தங்கள் வரம்பை தாண்டியதாக உள்ளது. யாருடைய வாக்குறுதியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகளே வெளிப்படுத்தும்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago