வளம் கொழிக்கச்செய்யும் வைகை நதி பாயும் நகரம் மதுரை. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய நகரம்; தமிழ்ச் சங்கம் மூலம் தமிழ் வளர்த்த நகரம்; திருவிழாக்களின் நகரம் என்று இதன் சிறப்புகள் ஏராளம். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அழகர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் இங்கு உண்டு. தென் மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் மதுரை மாவட்டத்தில் மட்டும் தற்போது 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
பொருளாதாரத்தின் திசை: நெசவுத் தொழில், ஜவுளி, வர்த்தகம், உதிரி பாகங்கள் தயாரிப்பு, உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இங்கு உள்ளன. சிறு, குறு தொழில்களும் உண்டு. மேலூர், மதுரை கிழக்கு ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதானப் பங்கு வகிக்கிறது. பெரியாறு, வைகையை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஒத்தக்கடையில் ‘சில்வர்’ பட்டறை, ஜெய்ஹிந்த்புரம், பெத்தானியபுரத்தில் சிறு தொழில்கள் பிரதானமாக உள்ளன. திடீர் நகர், மாப்பாளையம் பகுதிகளில் சிறு வியாபாரிகள் அதிகம் உள்ளனர். மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மனை வணிகம் வளர்ச்சியடைந்துவருகிறது.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: தென் மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் வந்துசெல்லும் மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது. சாலை வசதிகளும் மோசம். குடிநீர்ப் பற்றாக்குறை, போதிய அளவில் பாதாளச் சாக்கடை வசதி இல்லாதது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது, கடுமையான வரி உயர்வு போன்றவை தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்புள்ள பிரச்சினைகள். விவசாயப் பிரச்சினைகளுக்கு யாரும் காது கொடுப்பதாகத் தெரியவில்லை. முக்கியத் தொழிற்கூடங்கள் இல்லை; மதுரையிலிருந்து மேலூர், போடி, அருப்புக்கோட்டைக்கு இணைப்பு ரயில் வசதி இல்லை என்று பல பிரச்சினைகள் தீர்வுகளின்றித் தொடர்கின்றன. சமயநல்லூர் - ஊத்தங்குடிக்குச் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டம் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
நீண்ட காலக் கோரிக்கைகள்: பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாகக் குடிநீர் கொண்டுவருவது, மத்திய அரசின் முக்கியத் தொழில் நிறுவனங்களை மதுரைக்குக் கொண்டுவருவது, பெரியாறு அணையில் 108 அடிக்குக் கீழே உள்ள தண்ணீரை எடுக்கும் தொழில்நுட்பம், வைகை அணையைத் தூர்வாரி தண்ணீர் சேமிப்பை அதிகரிப்பது, கிருதுமால் நதியைப் பாதுகாப்பது என்று பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. கூடுதல் ரயில்கள், வலுவான சுற்றுலா கட்டமைப்புகள், மென்பொருள் நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், பெரிய தொழிற்கூடங்கள் தேவை என்கிறார்கள் தொகுதி மக்கள். விமான நிலைய விரிவாக்கம் இன்னும் முடியவில்லை.
ஒரு சுவாரஸ்யம்: செல்லூர் பகுதியில் நூற்பாலை, தெப்பக்குளத்தைச் சுற்றி நெசவுத் தொழில்கள் அதிகம் என்பதால் தொழிலாளர்கள் அதிகம். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தன. 1952 சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் (தற்போது மதுரை கிழக்கு) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ராமமூர்த்தி போட்டியிட்டார். அப்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், சிறையிலிருந்துகொண்டே அந்தத் தேர்தலில் அவர் வென்றார்!
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் யாதவர், பட்டியலினத்தவர்கள், தெலுங்கு சமுதாயத்தினர், செளராஷ்டிரா சமூகத்தினர், சிறுபான்மையினர் என பரவலாக வசிக்கின்றனர். பொதுவாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இந்தத் தொகுதியில் சமமான பலம் உண்டு.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எட்டு முறை வென்றிருக்கிறது. கக்கன், ஆர்.வி.சுவாமிநாதன், ஏ.ஜி.சுப்புராமன், ஏ.ஜி.எஸ்.ராம்பாபு உள்ளிட்டோர் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனதா கட்சி சார்பில் சுப்பிரமணியன் சுவாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ராமமூர்த்தி, பி.மோகன் ஆகியோரும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள். திமுக, அதிமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறை வென்றிருக்கின்றன.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 15,20,728
பெண்கள் 7,70,328
ஆண்கள் 7,50,321
மூன்றாம் பாலினத்தவர்கள் 79
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள் 90.86%
முஸ்லிம்கள் 5.56%
கிறிஸ்தவர்கள் 3.22%
இதர சமூகத்தினர் 0.36%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 82.0%
ஆண்கள் 86.55%
பெண்கள் 76.74%
கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago