இந்தியா இனி இந்தியாவாக இருக்குமா?- பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் பிரபல அமெரிக்க வாழ் இந்தியர்

By க.சே.ரமணி பிரபா தேவி

அமெரிக்க வாழ் இந்தியரான ஹசன் மின்ஹஜ், நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் 'இந்தியத் தேர்தல்' என்ற தலைப்பில் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது இணையவெளியில் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

யார் இந்த ஹசன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிமான ஹசன் மின்ஹஜ் அமெரிக்காவில் 'தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியை நடத்தும்போது பிரபலமானார். நடிகரும் ஸ்டேண்ட் காமெடியனுமான ஹசன், தற்போது உலக அரசியல் விமர்சகராகவும் மாறிவிட்டார்.

என்ன நிகழ்ச்சி?

நெட்ஃப்ளிக்ஸில் 'Patriot Act' என்னும் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள இணைய ரசிர்களைத் தன்வசப்படுத்தியவர் ஹசன். இந்நிகழ்ச்சியில் சர்வதேச அரசியல் குறித்தும் அதன் தலைவர்கள் (அதிபர்கள், பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்) குறித்தும் பகடி செய்வது அவரின் வழக்கம்.

இந்நிலையில் கடைசியாக வெளியான எபிசோடில் 'இந்தியத் தேர்தல்' குறித்து தெரிவித்துள்ளார் ஹசன். முன்னதாக இந்திய அரசியல் குறித்துப் பேசப்போகிறேன் என்று  தன்னுடைய உறவினர்களிடம் பகிர்ந்துகொள்கிறார் ஹசன். உடனே அவர்கள், ''அமெரிக்காவில் வசிக்கும் உனக்கு இந்திய அரசியல் எப்படித் தெரியும்?'', ''வெளியே கிடக்கும் குப்பைகள் அனைத்தும் உன் முகத்தில் வீசப்படும்'', ''முஸ்லிம் என்பதால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவாய்'', ''பேசாமல் போய் கிரிக்கெட் பற்றிப் பேசு'' என்று எச்சரிக்கை செய்கின்றனர்.

என்ன பேசினார்?

ஆனால் அவை குறித்துக் கவலைப்படாத ஹசன், இந்தியாவின் பன்முகத் தன்மை, பல்வேறு மொழிகள், மதங்கள் தாண்டிய கலாச்சாரத்தோடு தனது பேச்சைத் துவங்குகிறார். பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை எப்படி இந்து தேசியவாதமாக மாற்றப்பட்டது என்பது குறித்தும் காஷ்மீர் பாலகோட் தாக்குதல் குறித்தும் தனக்கே உரிய எள்ளல் பாணியில் விவரிக்கிறார்.

மரங்கள் மீது குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து சூழலுக்கு எதிரான தீவிரவாதத்தை  இந்தியா முன்னெடுத்தது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டையும் சுட்டுக்காட்டுகிறார். இதன்மூலம் பாஜகவுக்கு ஆதரவான சூழல் மெல்ல அதிகரிப்பதையும் சொல்கிறார் ஹசன்.

இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று மோடி முன்வைத்த வாக்குறுதியையும் அதற்காக  'இந்தியா ஃபர்ஸ்ட்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியதையும் குறிப்பிடும் ஹசன், ட்ரம்ப்பின் 'அமெரிக்க ஃபர்ஸ்ட்' வாக்குறுதியோடு அதை ஒப்பிடுகிறார்.

ஏராளமான விவகாரங்களில் இருவருக்கும் ஒத்துப்போவதையும் பொது மேடைகளில் முழக்கமிடும் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் தயங்குவதையும் முன்வைக்கிறார்.

இந்தியத் தேர்தல் குறித்த தனது நிகழ்ச்சி பற்றிப் பேசத் தான் அழைத்தபோது, பாஜக தலைவர்கள் யாரும் முன்வராததைக் குறிப்பிடும் ஹசன், காங்கிரஸின் சசி தரூர் பேசிய விதத்தைச் சிலாகிக்கிறார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி முந்தைய ஆண்டுகளில் பல்வேறு விதமான ஊழல்களில் சிக்கியதையும், மாபெரும் ஊழலாக 2ஜி ஊழல் உருவெடுத்ததாகவும் விமர்சிக்கிறார்.

49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜகவின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதையும் இதுதொடர்பான தரவுகளை தேர்தலுக்காக பாஜக மறைப்பதாகவும் கூறுகிறார்.

கருப்புப் பணத்தை ஒழிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகவும் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்ததாகவும் கூறுபவர் இதைச் சொன்னால் என்னை 'பாகிஸ்தானின் ஏஜெண்ட்' என்பார்கள் என்கிறார்.

துப்பாக்கியோடு இருக்கும் துறவி என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் குறிப்பிடும் ஹசன், ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள், அதன் தீவிர இந்துத்துவா கொள்கைகள், பசுவின் பெயரால் தலித்துகளின் மீதும் முஸ்லிம்களின் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து வெவ்வேறு ஊடகங்களின் காணொலிகள், பேட்டிகள் மூலம் தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்.

இறுதியாக, ''இந்தியா ஜனநாயக நாடாக இருக்குமா இருக்காதா என்பதை 1977-தேர்தல் முடிவுசெய்தது. இந்தத் தேர்தல் (2019) தேர்தல் இந்தியா இனி இந்தியாவாக இருக்குமா?'' என்ற யோகேந்திரா யாதவின் கருத்தோடு நிகழ்ச்சியை இறுதி செய்கிறார்.

எதிர்வினை என்ன?

முன்னதாக இதே நிகழ்ச்சியில் கடந்த ஜனவரியில் சவுதி அரசை விமர்சித்தும், சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்தும் ஹசன் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து சவுதி அரசின் அழுத்தம் காரணமாக அந்த எபிசோடு முழுவதுமாக நீக்கப்பட்டது.

ஹசன், ஆளும் பாஜகவையும் அதன் கொள்கைகளையும் நெட்ஃப்ளிக்ஸில் விமர்சித்ததை அடுத்து, ட்விட்டரில் #BoycottNetflix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகின் கீழ் ஏராளமான 'சவுகிதார்கள்' ஹசனுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்துள்ளனர். இந்த வீடியோவை முடக்கவேண்டும் என்று பாஜக தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்