திராவிடக் கழகங்கள் பெரியாரைத் தந்தை என்று பெருமிதத்தோடு அழைக்கிறது. ஆனால், இன்று அதிமுக மோடியை தந்தை என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. இது அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து எதிர்கொள்கிறது. தமிழகத்தில் 9 தொகுதிகள் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போதுதான் வெளியாகும். ஏன் இந்த தாமதம்?
தற்போதைய சூழலில் தேர்தல் அட்டவணையின்படி கட்சிகள் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்வதற்கான நாட்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் வாக்காளர்களைச் சந்திக்கும் கால அவகாசத்தை குறைக்கிறது. இத்தகைய தாமதம் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் மீது சலிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
இந்த இழுபறிக்கு கோஷ்டிப் பூசல்தான் காரணம் எனக் கூறப்படுகிறதே?
தேர்தல் அறிவிக்கப்பட்டால் எல்லா கட்சித் தொண்டர்களுக்கும் களம் காணும் ஆசை வரும். ஒரு தொகுதியில் போட்டியிட ஒருவர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்வதில்லையே. காங்கிரஸில் மட்டும்தான் வேட்பாளர் தேர்வில் இழுபறி நடக்கிறதா? எல்லா கட்சிகளுமே இதனைக் கடந்துதான் வருகின்றன. இது கட்சி நிர்வாகம் சார்ந்த விஷயமே தவிர கோஷ்டிப் பூசல் பிரச்சினையில்லை. அகில இந்திய அளவில் வேட்பாளர் தேர்வில் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், அதற்காக காலத்தை நீட்டிக்கொண்டே செல்லாமல் விரைவில் வேட்பாளர்களை அறிவித்து அவர்களைக் களத்தில் நிறுத்த வேண்டும்.
தொகுதியை கேட்டுப் பெறுவதில் தவறான முடிவை எடுத்துவிட்டு காங்கிரஸ் தவிப்பதாகக் கூறப்படுகிறதே? குறிப்பாக கரூர், கிருஷ்ணகிரியை பெற்றிருக்கக்கூடாது தென்காசியை விட்டிருக்கக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறதே?
இந்தக் கேள்விக்கான பதில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் விவாதிக்கப்பட வேண்டியது. அப்போது ஆதங்கங்களைப் பற்றி பேசலாம். இப்போதைய இலக்கு காங்கிரஸ் வெற்றிக்காக உழைப்பது.
தமிழகத்தில் 9 தொகுதிகள் பெற்றுள்ளீர்கள். 9-லும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்புகிறீர்களா?
வெற்றியை நோக்கிதான் உழைக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் இந்தமுறை காங்கிரஸ் நிச்சயமாக அதிக இடங்களைக் கைப்பற்றும். மோடி அரசால் ஏமாற்றமடைந்தவர்கள் மோடி ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளவர்கள் நிச்சயமாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். மோடி ஆட்சியின் கீழ் ஒவ்வொரு தனிநபரின் சொந்த வாழ்க்கையில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என மக்களின் சொந்த வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை பாஜக ஏற்படுத்தியிருக்கிறது. இது திமுக, காங்கிரஸுக்கான வாக்குகளாக மாறும்.
ராகுல் தமிழகத்தில் மேற்கொண்ட கலந்துரையாடல், பிரச்சாரத்துக்குப் பின் அவருக்கு தமிழகத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து..
ராகுல் காந்தியின் பேச்சு தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. தமிழக வாக்காளர்கள் தமிழ்நாட்டின் பார்வையில் தேர்தலை அணுகவேண்டும் என்று புரியவைத்திருக்கிறது. தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தேசப் பாதுகாப்பு, மோடிதான் சிறந்த காவலர் என்றெல்லாம் கூறி தேர்தலின் மையப்புள்ளியை திசை திருப்பியுள்ளார்.
ஆனால், மோடி அரசு தமிழகத்துக்கு செய்துள்ள அநீதிகள் ஏராளம். தமிழகத்துக்கு மத்திய நிதி தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய நிதி, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு எங்கே? இதையெல்லாம் பற்றி மக்கள் சிந்திக்கவிடாமல் தேச பாதுகாப்பு என்ற போர்வையை எடுத்துக் கொண்டு மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்.
தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தை எல்லாவற்றிற்கும் கெஞ்சும் நகராட்சியைப் போல் பாஜக அரசு தரம் குறைத்திருக்கிறது. ராகுல் காந்தியின் பேச்சு பாஜக அதிமுகவின் இந்த ஏமாற்று வேலையை எடுத்துரைத்து தமிழக மக்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
நானும் அதைத்தான் விரும்புகிறேன். அவர் தமிழகத்திலிருந்து போட்டியிட்டால் அது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பெரும் பலமாக அமையும். தமிழ் மண்ணில் இருந்து பிரதமர் தேர்வானால் அது நமக்கு பெருமைதானே.
ஆனால் இன்னும் ராகுலை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவிக்கவில்லையே. சோனியாகூட பிரதமராகலாம் எனக் கூறப்படுகிறதே?
கடந்த 2004, 2009 தேர்தல்களில்கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைச் சொல்லி வாக்கு கேட்கவில்லையே. மோடி ஆட்சியின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி யுத்த களமாக இருக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசால் மாநிலங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இந்த வேளையில் காங்கிரஸின் வெற்றிதான் பிரதானம். பிரதமர் யார் என்பது வெற்றிக்குப் பின்னர் முடிவு செய்ய வேண்டியது.
இந்தத் தேர்தலில் அமமுக யாருக்கு சவாலாக இருக்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கா? அல்லது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கா?
இப்போது இந்த நிமிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தின் அடிப்படையில் அமமுக யாருக்குமே சவால் அல்ல. பிரச்சாரங்கள் சூடு பிடித்து 10 நாட்கள் ஆகட்டும் அப்புறம் அதைப் பற்றி விவாதிக்கலாம்.
தமிழகம் என்றால் திராவிட அரசியல்தான் என்ற நிலையை மாற்றி அதிமுக - பாஜகவை ஆதரித்து கூட்டணி வைத்திருக்கிறதே..
திராவிடக் கழகங்கள் பெரியாரைத் தந்தை என்று பெருமிதத்தோடு அழைக்கிறது. ஆனால், இன்று அதிமுக மோடியை தந்தை என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. இது அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு. பாஜகவுடன் அதிமுக ஏற்படுத்தியுள்ள தேர்தல் உடன்பாடு கழுத்தில் கயிறு கட்டி கிணற்றில் குதிப்பதற்கு.
அதிமுக தனித்துப் போட்டியிருந்தாலும்கூட சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியே அவர்களுக்கு மிஞ்சும்.
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீண்ட காலமாக ஒரு தலைவரை மட்டுமே என்று நம்பி நாம் வளர்ந்திருக்கிறோம். நமது அந்த அரசியல் நம்பிக்கைதான் அவரால் மட்டுமே எல்லாம் செய்ய முடியும் என்ற எண்ணம் நமக்கு வந்தது. ஆனால், இன்றுள்ள தலைவர்கள் நமது கோரிக்கைகளுக்கு நம்முடன் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். அதற்கு திமுக தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த உதாரணம். திமுகவின் தேர்தல் அறிக்கை நாங்கள் இதைச் செய்து தருவோம் என்று வாக்குறுதி தரும் உரிமைப் பிரகடனமாக இருக்கிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை அடிமை சாசனமாக இருக்கிறது.
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago