மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி பேர நாடகங்களின் இரைச்சல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ‘எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது; இத்தனைத் தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணிக்கு வருவோம்’ என்றெல்லாம் நிபந்தனைகளுடன் பேரம் பேசும் கட்சிகள்; நாடி வரும் கட்சிகளுக்கு இடம் ஒதுக்க யோசிக்கும் பிரதானக் கட்சிகள் என்று எல்லா புறங்களிலும் தொகுதி உடன்பாட்டுச் சிக்கல்கள் தென்படுகின்றன. ஒவ்வொரு கட்சியும் கேட்கிற எண்ணிக்கை இருக்கட்டும், உண்மையிலேயே அதற்கு அக்கட்சிகள் பொருத்தமானவைதானா, எந்த அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது? அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்களிடம் கேட்போம்.
ரவீந்திரன் துரைசாமி, அரசியல் ஆய்வாளர்:
முதலில் திமுக அணியில் சேர வாய்ப்பிருக்கும் கட்சிகளைப் பார்க்கலாம். முந்தைய தேர்தல்களின் வாக்குகள் சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்றகட்சிகள் எல்லாம் ஒரு தொகுதி பெறுவதற்கே தகுதியானவை. வைகோவின் பிரச்சார வலிமைக்காக மதிமுகவுக்கு மட்டும் கூடுதலாக ஒரு தொகுதி தரலாம். கொள்கை அடிப்படையில் உயர்ந்த கட்சியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட்டுகளின் வாக்கு வங்கி மிகக் குறைவு. எனவே, அக்கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை. விசிக வலுவான கட்சிதான். ஆனால், இடைநிலைச் சாதியினர் மத்தியில் விசிகவுக்கு எதிரான மன நிலையைராமதாஸ் உருவாக்கிவிட்டது இப்போதும்அக்கட்சிக்குப் பின்னடைவாக இருக்கிறது.
அதிமுக அணியில் பாமக தன் பேர வலிமையால், தகுதிக்கும் மேல் தொகுதிகள் வாங்விட்டது. தேமுதிகவைப் பொறுத்தவரையில் நான்கு தொகுதிகள் தான் தரலாம். ஆனால், பாமகவுக்கு இணையாக தொகுதிகள் கேட்பதுதான் அந்த அணியில் நிலவும் பிரச்சினைக்குக் காரணம். அதிமுக அணியில் தொகுதி கிடைக்காததால், தனித்துப் போட்டி என்று பேசுகிறார் சரத்குமார். அவருக்கு தொகுதி தராதது சரியான முடிவே.
சிகாமணி, மூத்த பத்திரிகையாளர்:
தொகுதிப் பங்கீடு எந்தளவுக்கு மனக் கசப்பில்லாமல், இணக்கமாக முடிகிறதோ அந்தளவுக்கு அது தேர்தலில் வாக்குப் பரிமாற்றத்துக்கு உதவும். ஒரு தொகுதிக்கு மேல் கிடையாது என்று சொன்னால், சில கட்சிகள் கூட்டணியைவிட்டே வெளியேறி விடக்கூடும். அரைமனதோடு அதிகத் தொகுதிகளைவழங்கிவிட்டு, அங்கே சரியாக வேலை செய்யாமல் விட்டால் எதிர்க்கட்சிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும். வாக்கு வங்கியை மட்டும்
கருத்தில்கொள்ளாமல், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, விசிக, மதிமுகவுக்குத் தலா இரண்டு தொகுதிகளை வழங்குவது திமுக கூட்டணிக்கு நல்ல பலனைத் தரும்.
ஆனால், திமுகவைப் பொறுத்தவரையில் அதிகஇடங்களில் வெற்றிபெறுவதன் மூலம், மத்தியஅரசில் அமைச்சர் பதவியைப் பெறலாம் என்று கருதுவதற்கு இடமுள்ளது. அதன் காரணமாகவே,சிறு கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்குவதற்குத்தயங்குகிறது. கடந்த தேர்தலில் வெறும் 1% வாக்குவித்தியாசத்தில் திமுக ஆட்சியைத் தவறவிட்டது. எனவேதான் இம்முறை தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இவ்வளவு இறங்கிப் பேசிக்கொண்டிருக்கிறது.
‘தராசு’ ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர்:
பொதுவாக அரசியல் கட்சிகள் முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் தொகுதிகள் கேட்பதில்லை. 10% வாக்கு வங்கியுள்ள ஒரு கட்சிக்கு, 10% தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவது என்றால் 40-க்கு நான்கு தொகுதிகள்தான் தர முடியும். ஆனால், அரசியல் களம் அப்படியல்ல. “ஒரு கட்சி நமக்கு நான்கு இடங்களில் வெற்றியைப் பெற்றுத்தரும் என்றால், அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதியைக் கொடுக்கலாம்” என்பார் கருணாநிதி. இந்த உத்தி இதுவரையில் ஓரளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், பாமகவைவிட வலிமையான கட்சி தேமுதிகதான். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஆயிரம் வாக்குகள் வீதம், தமிழகம் முழுவதும் அந்தக் கட்சியால் வாக்கு பெற்றுத்தர முடியும்.
இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு தாராளமாக இருப்பதற்கு முக்கியக் காரணம், 21 சட்டமன்ற இடைத்தேர்தலும் சேர்ந்து வருவதுதான். அந்தத் தொகுதிகள் அனைத்திலுமே கூட்டணிக் கட்சிக்கு ஒரு இடம்கூட தராமல் போட்டியிட வேண்டிய நிலையில் அதிமுக இருப்பதால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அது கணிசமாக விட்டுக்கொடுத்திருக்கிறது.
தேசிய கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரஸுசுக்கும் தமிழ்நாட்டில் என்ன ஓட்டுவங்கிஇருக்கிறது, அவர்களுக்கு ஏன் ஐந்து, பத்து என்று தொகுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பொதுவாகக் கேட்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வந்தால், தேசிய கட்சிக்கு மக்களவையிலும், மாநிலக் கட்சிக்கு சட்டமன்றத்திலும் அதிக இடங்களை ஒதுக்குவது எம்ஜிஆரின் உத்தி.
சிறிய கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதற்குக் காரணம், அவை அனைத்தும்தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்துநிற்கின்றன என்பதுதான். பாமகவுக்கு 2011 முதலே அங்கீகாரம் இல்லை. இம்முறை நீதிமன்றத்தை நாடித்தான் மாம்பழம் சின்னத்தை வாங்க வேண்டியதிருக்கும். இந்தத் தேர்தலிலும் தோற்றால், சின்னம் நிரந்தரமாகவே பறிபோய்விடும். தேமுதிக கடந்த இரண்டு தேர்தல்களிலும் குறைந்தபட்ச வாக்கு சதவிகிதத்தை எட்டவில்லை. இம்முறை அக்கட்சி அங்கீகாரம் வாங்கியே ஆக வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ தேசிய கட்சி அந்தஸ்தை முன்பே இழந்துவிட்டது. மதிமுக 2010 முதலே தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்துவிட்டது. இந்த முறை வைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்வதாக அறிகிறேன்.
கூட்டணி அமைப்பது பெரிதல்ல, தானும் வெற்றிபெற்று கூட்டணி கட்சியையும் பெற்றிபெற வைப்பதில்தான் அதன் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது!
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago