வேட்புமனுத் தாக்கலின் போது மதிமுக வேட்பாளருக்கு ஏற்பட்ட தாமதம்; ஆட்சியர் அலுவலக வாயிலில் கணேசமூர்த்தி தர்ணா

By க.சே.ரமணி பிரபா தேவி

ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியின் மனுத் தாக்கலின்போது தாமதம் ஏற்பட்டதால், அவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) மதியம் 1 மணிக்கு முன்பாகவே வந்தார். அவருக்கு மதியம் 1 முதல் 1.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 1.45 ஆகியும் அவரை அதிகாரிகள் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கணேசமூர்த்தி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கணேசமூர்த்தியுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் கதிரவனிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

இதுதொடர்பாக கணேசமூர்த்தியிடம் ’இந்து தமிழ்’ சார்பாகக் கேட்டபோது, ''வேட்பு மனுத் தாக்கல் செய்ய எனக்கு மதியம் 1 முதல் 1.30 மணி வரை நேரம் ஒதுக்கி இருந்தனர். ஆனால் நீண்ட நேரம் என்னைக் கூப்பிடவில்லை.

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். என்னை ஏன் கூப்பிடவில்லை என்று சத்தம் போட்டேன். என்னிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், நான் காத்திருக்குமாறு கூறவில்லை என்றார். தகவல் தொடர்புக்கு இடையேயான இடைவெளிதான். வேறு பிரச்சினை இல்லை'' என்றார் கணேசமூர்த்தி.

முன்னதாக, இன்று (திங்கட்கிழமை) கரூர் வேட்பமனுத் தாக்கலுக்குச் சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அளித்த நேரத்தைக் கடந்து காக்கவைத்து தம்பிதுரைக்கு முன்னுரிமை கொடுத்ததை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார் டிஎஸ்பி. இதனால் கொந்தளித்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE