அதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜகவுடன் பல இடங்களில் முரண்பட்டது. அடிப்படைக் கொள்கைகளிலே மாறுபடும் விதத்திலும், பாஜகவுக்கு அனைத்து விதத்திலும் ஒத்துப்போகவில்லை எனும் விதத்தில் அறிக்கை உள்ளது.
அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்துவிட்டார்கள் எனும் பொருள்பட கண்ணப்பன் நேற்று பேட்டி அளித்தார். எதிர்க்கட்சிகள் கருத்தும் அதுவாகத்தான் உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை வழக்கம்போல் இருக்கும் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் கூட்டணியில் இருக்கும், மத்தியில் ஆளும் பாஜகவை பல இடங்களில் நேரடியாக விமர்சித்தும் சில இடங்களில் அழுத்தமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
உதாரணத்திற்கு பாஜக அடிப்படைக் கொள்கையான பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது என்றும், அதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் வேண்டும் என குறிப்பிட்டு வாசகங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு சில அம்சங்கள் :
அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு:
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் லட்சக்கணக்கான சிறு மற்றும் சின்னஞ்சிறு வர்த்தகத் தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை ((Foreign Direct Investment) கொண்டுவரும் கொள்கையைக் கைவிடுமாறு இந்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிக்கும் அதிமுக:
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையவும், அவர்களின், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கவும், இந்தியப் பொருளாதாரம் மோசமான பின்னடைவை அடையவும் காரணமாக உள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை நிலையாகவும், உயர்ந்த நிலையில் வைத்திடவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கிடவும், நாட்டில் ஏழ்மையை முற்றிலுமாக ஒழித்திடவும், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும் நிதிக் கொள்கைகளில் தனித்தன்மையும், துடிப்பும் நிறைந்த உரிய மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டுமென்று மத்திய அரசை அதிமுக கேட்டுக்கொள்கிறது என குறிப்பிட்டுள்ளது.
ராஜபக்சக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பாஜகவிடம் இலங்கை இனப்படுகொலைக்காக நீதி கேட்கும் வாசகங்கள்:
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்து உதவியவர்கள் மீதும் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, ஈழத்தில் நடைபெற்ற துயரங்களின்பின்னணியில் மறைந்திருக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக கேட்டுக்கொள்கிறது.
மதச்சார்பின்மையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை:
பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்புச் சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது. ஒவ்வொரு நபரும் அவரின் விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கும், மற்றும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ம் பிரிவுகளுக்கு அதிமுக உரிய மதிப்பளிக்கிறது.
இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்பிற்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அதிமுக கேட்டுக்கொள்கிறது.
பாஜகவின் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள மத உரிமை, மதம் சார்ந்த இதர உரிமைகளுக்கு பொது சிவில் சட்டம் எதிரானது என்பதால், அத்தகைய புதிய சட்டம் எந்த வடிவிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
இந்தி திணிப்புக்கு எதிராகவும், இந்திப்பெயரில் திட்டங்களுக்கு பெயர் வைக்கவும் ஆட்சேபனை:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் மற்றும் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சில நிகழ்வுகளிலும் இந்தி மொழியை திணிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தும்.
தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள மத்திய அரசின் திட்டங்களான பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (நிதி பிரிவில் சேர்த்தல்) சுகன்யா ஷம்ரிதி யோஜனா (குழந்தைகள் நல சேமிப்புத் திட்டம்) பிரதான் மந்திரி பாஷல் பீமா யோஜனா (பயிர் பாதுகாப்புத் திட்டம்) போன்ற திட்டங்களின் பெயர்களை மத்திய அரசு இந்தி மொழியில் திணிப்பது பெரும் வேதனை தருவதாக உள்ளது.
எனவே, மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் திட்டங்களை இந்தி மொழி பெயரில் குறிப்பிடுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு பதிலாக, அந்தத் திட்டங்களுக்கு சமமான தமிழ் பெயர்களைச் சூட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தும்.
வரி வருவாயில் பங்கு கேட்டு பதிவு:
மத்திய அரசு, அதன் வரி வருவாயில் 60 சதவீதத்தை, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
ஆ) சரக்கு மற்றும் சேவை வரி நிலுவை, சர்வ சிக்ஷாஅபியான் திட்டத்தின் நிலுவை, ராஷ்டிரிய மத்ய சிக்ஷாஅபியான் திட்ட நிலுவை, 13-வது நிதிக் குழுவின் மானிய நிலுவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதிக் குழுவின் மானிய நிலுவை போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 9,988 கோடி நிலுவையாக உள்ளது.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிட வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஜிஎஸ்டிக்கு எதிரான பதிவு:
சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பங்கீட்டில், 2016-ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 101-ன் படி, 2015-2016 ஆம் ஆண்டை அதிமுக தேர்தல் அறிக்கை நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2019-ஐ அடிப்படையாகக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு 14 சதவீத இழப்பீடு வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் தமிழகத்திற்கு பெரும் வரி வருவாய் இழப்பைத் தந்துள்ளது. எனவே, மேற்கண்ட அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 101-க்கு மறு திருத்தச் சட்டம் கொண்டு வந்து, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் பேரிழப்பை ஈடுகட்ட, குறைந்தது 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீட்டை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கஜா புயலில் உரியநிதி தராத மத்திய அரசு அறிக்கையில் ஒப்புதல்:
கஜா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாயின. மனித உயிர்ச் சேதம், கால்நடைகள் உயிர்ச் சேதம், விவசாயப் பயிர்கள், மரங்கள் உட்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. சேதங்களை கணக்கிட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு நிவாரண நிதி கோரப்பட்டதில், போதிய நிதி வரப்பெறாததால் பாதிப்படைந்த மக்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் வேதனையில் உள்ளனர்.
எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதார வசதிகளை வழங்குமாறு, மத்திய அரசை அதிமுக கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு பல இடங்களில் கூட்டணி கட்சியான மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு ஆட்சேபகரமான, ஒப்புக்கொள்ளமுடியாத, எதிர்வாதம் வைக்கின்ற, வலியுறுத்துகிற பல அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது.
கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவின் வேகத்தை காட்டிய அதிமுக தலைமை, தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதாவின் அழுத்தத்தை ஆங்காங்கே பதித்துள்ளனர் என்றுதான் கூறவேண்டும். இது இன்றுள்ள அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்கிற கருத்தையும் மறுப்பதற்கில்லை.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago