ராமதாஸ், விஜயகாந்த் போல நான் அவமானப்பட விரும்பவில்லை- தி.வேல்முருகன் பேட்டி

By செல்வ புவியரசன்

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் 100%, மத்திய அரசுப் பணிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் 90% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முழக்கத்தோடு தொடர்போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகளும் தொகுதிப் பங்கீடுகளும் முடிவடையும் நிலையிலிருக்கின்றன. இரண்டு கூட்டணிகளிலும் இடம்பெறாத வேல்முருகன் யாரை ஆதரிக்கப்போகிறார்? அவருடன் பேசியதிலிருந்து...

மக்களவைத் தேர்தலில் நீங்கள் யார் பக்கம்?

ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பண்பாடு என்று இந்தியாவை மாற்ற முயற்சிக்கும் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராகவே நாங்கள் நிற்கிறோம். வர்தா புயல், கஜா புயல்கள் போன்று தமிழகம் சந்தித்த இயற்கைப் பேரிடர்களின்போது தமிழகத்தைக் கைவிட்டது பாஜக அரசு. நீட், அணு உலை விரிவாக்கம், ஜிஎஸ்டி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் என்று மோடிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் அதிமுக. மத்தியில் ஆளும் பாஜகவை மட்டுமல்ல, தமிழகத்தை

ஆளும் அதிமுகவையும் ஆதரிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அப்படியென்றால், திமுக- காங்கிரஸ் பக்கம் என்று சொல்லலாமா?

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை காங்கிரஸும் திமுகவும் தடுக்கவில்லை என்று நான் கட்சி தொடங்கிய ஏழாண்டு காலமாகப் பேசிவருகிறேன். எனவே, திமுக கூட்டணியில் எனக்கு இடம் ஒதுக்கத் தயாராக இருந்தாலும்கூட நான் கொள்கையிலிருந்து மாறுபடுகிறேன் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ராமதாஸ், விஜயகாந்த் போல நான் அவமானப்பட விரும்பவில்லை. திமுகவும் பெரியண்ணன் மனநிலையில்தான் நடந்துகொள்கிறது. அதையும் நாங்கள் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில்தானே பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறது?

எழுவரையும் விடுதலை செய்தால்தான் கூட்டணி வைப்போம் என்று பாமக சொல்ல வேண்டியதுதானே? இன்று தமிழக முதல்வர் நினைத்தாலும் அது சாத்தியம்தானே. அப்படி பாமக சொல்லியிருந்தால் அது வரவேற்றத்தக்க முடிவாக இருந்திருக்கும்.

கமல்ஹாசன் அழைப்பு விடுத்தாரா? தினகரனை ஆதரிக்கப்போகிறீர்கள் என்ற பேச்சும் இருக்கிறதே...

என் நலம்நாடும் நண்பர்கள் கமல்ஹாசன் தொடர்பில் கேட்டார்கள். சினிமாக்காரர்களை ஆதரிப்பதில்லை என்பது எங்களது கட்சியின் கொள்கைமுடிவு என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். நடிகர்களின் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இதுவரையில் அவர்களுக்கு அரசியலில் கொடுத்த பங்கீடு போதுமென்று நினைக்கிறேன். நம்மை மதித்து நமது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்வகையில் தொகுதிகளை ஒதுக்கக்கூடிய கட்சியையே ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியினரின் விருப்பம். இதுவரை ஆட்சிக்கு வராத கட்சியாக அது இருக்கும். 10-ம் தேதி வடலூரில் கூடவிருக்கும் சிறப்புப் பொதுக்குழுவில் எங்கள் இறுதிமுடிவை அறிவிக்க இருக்கிறோம்.

இவ்வளவு விஷயங்களை நீங்கள் பேசினாலும், சாதிய முத்திரை உங்கள் கட்சி மீது இருக்கிறதே... அதைத் துடைத்தெறியக் கூடாதா?

ஒருகாலத்தில் பாமகவில் நான் இடம்பெற்றிருந்ததால் அப்படிப் பேசுகிறார்கள். பாமகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, நான் கட்சி தொடங்கிய ஏழாண்டு காலமாக ஒத்த கருத்துடைய அத்தனை பேரோடும் இணைந்து போராடிவருகிறேன். பெரியாரையும் கார்ல் மார்க்ஸையும் வழிகாட்டும் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதி நான். தயவுசெய்து இதை அழுத்தமாக எழுதுங்கள். சாதியத்தையும் எதிர்த்தே போராடுகிறேன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்