பிரதமர் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு உயர்வு: பாஜக கூட்டணிக்கு 285 இடம் கிடைக்கும் - இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 285 இடங்கள் கிடைக்கும்  என்று ‘இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்’ கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மக்களவை  தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும் என்று ‘இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்’ கருத்துக் கணிப்பு நடத்தியது. 

 கருத்துக் கணிப்பில் கூறியிருப்பதாவது:

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 285 இடங்களைக் கைப்பற்றும். மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை விட (272) இது 13 இடங்கள் அதிகம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக 282 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால்,  வரும் தேர்தலில் பாஜக 238 இடங்களில் வெற்றி பெறும். இது கடந்த தேர்தலை விட 34 இடங்கள் குறைவாகும்.

அதேநேரத்தில் கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் 82 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 126 இடங்களைப் பெறும்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிராந்திய கட்சிகள் மற்றும் சில சுயேச்சைகளுக்கு 132 இடங்கள் கிடைக்கும்.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) பாஜக, சிவசேனா, அகாலி தளம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (எல்ஜேபி), பாமக மற்றும் பிராந்திய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிர ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சில சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

‘மற்றவர்கள்’ என்ற பிரிவில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரி முன்னணி, மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி, ஆம் ஆத்மி, பக்ருதின் அஜ்மலின் ஏஐயுடிஎப் கட்சி, அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, அமமுக மற்றும் சுயேச்சைகள் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக கூட்டணியில் பாஜக 238, சிவசேனா 10, ஐக்கிய ஜனதா தளம் 12, அதிமுக 12, அகாலி தளம் 3, லோக் ஜனசக்தி கட்சி 3 மற்றும்  பிராந்திய, சிறு கட்சிகளை சேர்த்து என்டிஏ 285 இடங்களைப் பெறும்.

காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 82, திமுக 16, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 8, தெலுங்கு தேசம் 3 மற்றும் பிராந்திய, சிறு கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 126 தொகுதிகளைக் கைப்பற்றும்.

‘மற்றவர்கள்’ பிரிவில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் 30, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 18, மாயாவதியின் பகுஜன் சமாஜ் 16, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 14, பிஜு ஜனதா தளம் 14,  இடதுசாரி முன்னணி 6 இடங்களைக் கைப்பற்றும்.

பாஜக 238, காங்கிரஸ் 82, திரிணமூல் 30, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22, சமாஜ்வாதி 18, பகுஜன் சமாஜ் 16, திமுக 16, அதிமுக 12, டிஆர்எஸ் 14, இடதுசாரி முன்னணி 6, ஐக்கிய ஜனதா தளம் 12, என்சிபி 7, ஆர்ஜேடி 8, சிவசேனா 10, பிஜு ஜனதா தளம் 14, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 38. மொத்தம் 543. இவ்வாறு ‘இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்’ கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் 2.5 சதவீத இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம் அல்லது குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 193 மக்களவை தொகுதிகளில், கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 38 ஆயிரத்து 600 வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

பணமதிப்பு நீக்கம், ரஃபேல் விவகாரம் போன்றவற்றால் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்று   செய்திகள் வெளியாயின.

இந்நிலையில்  பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு மோடிக்கு குஜராத், இமாச்சல், உத்தராகண்ட், கோவா, டெல்லி ஆகிய மாநிலங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள எல்லா மக்களவை தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்