பாஜகவுக்குத் தாவும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள்; குழப்பத்தில் மம்தா பானர்ஜி; தொண்டர்கள் கலக்கம்

By பிடிஐ

தேர்தலில் சீட் தராத விரக்தி மற்றும் கோபத்தால், மம்தா பானர்ஜியை விட்டு விலகி ஏராளமான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பாஜக பக்கம் சேர்ந்து வருகின்றனர். இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆடிப்போய் உள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் முகல் ராய் பாஜகவில் சேர்ந்த பின், நீண்ட காலத்துக்குப் பின் அக்கட்சியைச் சார்ந்த ஏராளமானோர் இப்போது பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போது பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கூடுதலாக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. இதனால், இந்த முறை புதிய முகங்கள் 18 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

நிர்வாகிகள் அதிருப்தி

கூச்பெஹர், பஷிரசத், ஜார்கிரம், மெதினிபூர், போல்புர், பிஷ்னுபுர், கிருஷ்ணா நகர் ஆகிய தொகுதிகளில் இப்போது இருக்கும் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பொறுமை காத்த பாஜக, இப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களை அரவணைத்துக் கொண்டு, அவர்களுக்கு சீட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் வலுவான போட்டியை அளிக்க முடியும். அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர்களை வைத்தே அந்தக் கட்சிக்கு எதிராக பணியாற்றி தோற்கடிக்க முடியும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகத் தொண்டர்களாக இருந்தவர்கள், இந்த முறை சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், திரைப்பட நடிகைகளுக்கு சீட் தந்துள்ளார் மம்தா பானர்ஜி. இதனால் அதிருப்தி அடைந்த சிலர் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளில் சேர்ந்துவிட்டனர்.

பாஜக கணிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சவுமித்ரா கான், அனுபம் ஹஸ்ரா, மூத்த தலைவர் அர்ஜுன் சிங் ஆகியோருக்கு இந்த முறை திரிணமூல் காங்கிரஸில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் அதிகமான அளவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்வார்கள் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு தினாஜ்புர் திரிணமூல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிப்லப் மித்ரா முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.

அவர் கூறுகையில், "பலூர்காட் தொகுதியின் எம்.பி. அர்பிதாவுக்கு மீண்டும் மம்தா பானர்ஜி வாய்ப்பு வழங்கியுள்ளதை அந்தத் தொகுதி மக்களே விரும்பவில்லை. அவரின் வெற்றிக்கு உறுதி கிடையாது. பல்வேறு தகுதியான தலைவர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. எங்களால் முடிந்த அளவு பணியாற்றுவோம்" என அதிருப்தியுடன் தெரிவித்துள்ளார்.

 

கோபம்

கூச்பெஹார் தொகுதியின் எம்.பி. பர்தா பிரதிம் ராய்க்குப் பதிலாக இடதுசாரியில் இருந்து விலகி கடந்த ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிரேஷ் சந்திர அதிகாரிக்கு மம்தா பானர்ஜி வாய்ப்பு வழங்கியுள்ளார்.

மம்தாவின் இந்தச் செயலால் பார்தா பிரதிம் ராய் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார். இதனால், இவரை அணுகி தங்கள் பக்கம் அனுப்ப, பாஜக வலை வீசி வருகிறது. அடுத்த சில நாட்களில் இவர் பாஜக பக்கம் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த மவுசம் பெனாசிர் நூருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த எம்எல்ஏக்களுக்குக் கூட இந்த முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றிய தொண்டர்களுக்கு சீட் இல்லை என்று ஆதங்கத்துடன் அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முர்ஷிதாபாத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்புத் தலைவர் ஷாமிக் ஹூசைனுக்கு வாய்ப்பு தராமல் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அபு தாஹிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு தராமல் அதிக அளவில் பெண்களுக்கும், மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திரிணமூல் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மம்தா பானர்ஜி மீது அந்தக் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

மம்தா பானர்ஜி மறுப்பு

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக சில ஆசை வார்த்தைகளைக் கூறி எங்கள் கட்சியில் சிறு அதிருப்தியில் இருப்பவர்களை இழுக்கப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இருந்தாலும், என்னுடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மீது முழுமையாக நம்பிக்கை இருக்கிறது. கட்சியின் கொள்கைகளுக்கும், ஒழுக்கத்துக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று நம்புவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

எங்கள் விளையாட்டைப் பாருங்க

ஆனால், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், "அடுத்து சில நாட்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமான முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணையப் போகிறார்கள். எங்கள் விளையாட்டு தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், "கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து எங்கள் கட்சியில் இருந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் ஏராளமான தலைவர்கள் விலகிச் சென்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். இப்போது, எங்களுக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்