மோடியும், அமித் ஷாவும் உ.பி.யை ஏமாற்றும் இரு குஜராத்திகள்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஐ.பி.சிங் தாக்கு

By ஆர்.ஷபிமுன்னா

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை, ‘உ.பி.யை ஏமாற்றும் இரு குஜராத்திகள்’ என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உ.பி. தலைவர் ஐ.பி.சிங் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

உ.பி. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ஐ.பி.சிங். இவர் நேற்று இரண்டாவது முறையாக பாஜகவில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.  சில விஷயங்களில் தம் கட்சி மீது அதிருப்தி அடைந்த ஐ.பி.சிங், ஆசம்கர் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் சிங் யாதவின் முடிவை வரவேற்று ட்வீட் செய்திருந்தார். இதுவன்றி, அவர் தனது ஆசம்கர் வீட்டில் தேர்தல் அலுவலகத்தையும் தொடங்கலாம் எனவும் அதில் கூறியிருந்தார்.

இது குறித்து உ.பி. மாநில பாஜகவின் பொதுச் செயலாளரான வித்யாசாகர் சோன்கர் கூறும்போது, ''எங்கள் மாநிலத் தலைவர் மஹேந்திர நாத் பாண்டே உத்தரவின் பேரில் ஐ.பி.சிங் கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்படுகிறார். இவர் கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கி இருந்தார்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மேலும் அதிருப்திக்கு உள்ளான ஐ.பி.சிங் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவைக் குறிப்பிட்டு தன் ட்வீட்டில் விமர்சனம் செய்தார். தன் ட்வீட்டுகளில் ஐ.பி.சிங், ‘குஜராத்தின் இரு ஏமாற்றுப் பேர்வழிகள் கடந்த ஐந்து வருடமாக உ.பி.யை ஏமாற்றி வருகின்றனர்,’ ‘இவர் பிரதமரா? அல்லது தன்னை விளம்பரப்படுத்துபவரா?’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன் ட்வீட்டுகளில் ஐ.பி.சிங் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், ‘ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை அணிபவர் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடுகிறார். இந்த ஒவ்வொரு கூட்டத்தின் செலவும் ரூ.100 கோடி எனும் நிலையில் தன்னை அவர் ஏழை என்கிறார்’என ட்வீட் செய்துள்ளார்.

இந்தி மொழியில் செய்யப்பட்ட மற்றொரு ட்வீட்டில் ஐ.பி.சிங், ‘தம் ட்விட்டர் மூலமாக நம் நாட்டின் பிரதமர் டிஷர்ட்டுகளும், டீயும் விற்பனை செய்வது சரியா?’ என விமர்சித்துள்ளார்.

'குஜராத்தின் ஆண்டு செலவிற்கான ஒதுக்கீடு ரூ.1.15 லட்சம் கோடி. ஆனால், அதை விட ஆறு மடங்கு பெரிய உபிக்கு வெறும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்' என சுட்டிக்காட்டிய ஐ.பி.சிங் உ.பி.யைச் சேர்ந்தவரான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர், ‘உங்கள் லக்னோ தொகுதிக்காக நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் பிறந்த சந்தவுலியின் கிராமத்திற்கு கூட உங்களால் ஒரு வளர்ச்சியும் செய்ய முடியவில்லை. உங்கள் அனைவரையும் பற்றி உபிவாசிகள் அறிவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஐ.பி.சிங்.

பாஜகவை எதிர்க்கும் ஐ.பி.சிங்கின் ட்வீட்டுகள் உ.பி.யில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன் 2012-ல் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உபேந்திர குஷ்வாஹாவை பாஜகவில் சேர்த்த போது ஐ.பி.சிங் கடுமையாக எதிர்த்தார்.

தேசிய சுகாதாரத் திட்டத்தில் ஊழல் செய்த குஷ்வாஹாவை கட்சியில் சேர்ப்பது தவறு என விமர்சனம் செய்தற்காக ஐ.பி.சிங் நீக்கப்பட்டிருந்தார். பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போது, ஐ.பி.சிங் எதிர்த்த உபேந்திரா குஷ்வாஹா தற்போது 'ஜன் அதிகார்' எனும் கட்சி தொடங்கி காங்கிரஸுடன் கைகோத்துள்ளார். அவருக்கு காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா ஏழு தொகுதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்