அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்: ஹரிஷ் ராவத் உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே அயோத்தி விவகாரம் மீ்ண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசும் இதில் கவனம் செலுத்தி வருகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி – பாபர் மசூதி நிலம் உட்பட 67.703 ஏக்கர் நிலம், மத்திய அரசின் 1993-ம் ஆண்டு அயோத்தியா சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சர்ச்சைக்குட்படாத 67 ஏக்கர் நிலத்தை அவற்றின் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை மத்திய அரசு கடந்த ஜனவரி 29-ம் தேதி கோரியது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மீண்டும் அயோத்தி விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

இதுகுறித்து டேராடூனில் ஹரிஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வேண்டும் என நாங்கள் நீண்டகாலமாகவே கூறி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சியமாக ராமர் கோயில் கட்டுவோம். அதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வோம்’’ எனக் கூறினார்.

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE