பெங்களூருவில் பிரகாசிப்பாரா பிரகாஷ் ராஜ்?- தமிழர், சிறுபான்மையினரை குறிவைத்து பிரச்சாரம்

By இரா.வினோத்

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச் சையாக களமிறங்கியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் அங்கு வெற்றி பெறுவதற்காக பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர், சிறுபான்மையினரை குறிவைத்து பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கப் போவதாக கடந்த ஜனவரி 5-ம் தேதி அறிவித்தார். அதுமுதல் தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார். ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டபோது, தங்களது கட்சியில் இணைந்தால் ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டனர். இந்நிலையில் பெங்களூரு மத்திய தொகுதியில் தொடர்ந்து 2 முறைவென்ற பாஜக வேட்பாளர் பி.சி.மோகனைவீழ்த்த பிரகாஷ் ராஜ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

தனியார் நிறுவனத்தின் மூலம் இந்த தொகுதியில் சர்வே ஒன்றையும் நடத்தி, அதன்படி பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளார். பெங்களூரு மத்திய தொகுதியில்சுமார் 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இளைஞர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். மொழிவாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக 7.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களை அடுத்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் 5.5 லட்சம் பேரும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழியினர் 3 லட்சம் பேரும் வசிக்கின்றனர்.

இந்த வாக்காளர்களை குறிவைத்துபிரகாஷ் ராஜ் பிரச்சாரத்தை வடிவமைத்துள்ளார். செல்லும் இடங்களில் கூடியிருக் கும் மக்களைப் பொறுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளில் பேசி அவர்களை கவர்கிறார். இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடன் செல்ஃபி எடுத்தும், ஆட்டோகிராஃப் போட்டும் வாக்கு சேகரிக்கிறார். மேலும் பிரச்சாரத்துக்கான குழுவை உருவாக்கி துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்.

பலமான கட்சிகள்வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் தமிழர்கள் இருப்பதால், இங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். மசூதி, ஆலயங்களுக்கு சென்றும் வழிபாடு நடத்தியுள்ளார்.

இந்த தொகுதியில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 காங்கிரஸ், 3 பாஜக வசம் உள்ளன. இந்த தொகுதியில் கணிசமான வாக்குவங்கி வைத்திருக்கும் மஜத இந்த முறை காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இந்தக் கூட்டணிக்கு பலம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் அதேபோல கடந்த தேர்தலில் சுமார் 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு அளித்துள்ளது. கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெறவும் பிரகாஷ் ராஜ் முயன்று வருகிறார். திரை பிரபலம், பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம், தமிழர்களுக்கு முன்னுரிமை, தலித் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் இந்த தொகுதியில் வெற்றிபெற்று விடலாம் என திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE