கள நிலவரம்: கோயம்புத்தூர் தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

ஒட்டுமொத்தக் கொங்கு மண்டலத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் தொகுதி கோயம்புத்தூர். பிரதானமான தொழில் நகரம். பஞ்சாலைகள், இன்ஜினீயரிங், நகைத் தொழில் என தொழில் சாம்ராஜ்யங்களும் இரும்புப் பட்டறைகள், மெக்கானிக் ஷாப்புகள் என சின்னச் சின்னத் தொழில்களும் நிறைந்த பகுதி கோவை. தொழிலே பிரதானம் என்பதால் அதில் ஒவ்வொரு முறையும் பயன்படுத்த வேண்டிய ஜிஎஸ்டி முறையால் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் நசுங்கியதாகக் கருதும் அனைவரும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனால் அக்கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி சவாலாக மாறியுள்ளது.

கோவை தொகுதியில் சுமார் 1 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களும் 50 ஆயிரம் கிறிஸ்தவ வாக்காளர்களும் உள்ளனர். மலையாளிகள் கணிசமாக உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 1.5 லட்சத்தைத் தாண்டும். இவர்கள் அனைவரின் வாக்குகளும் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்குச் செல்லும். இதுதவிர திமுக வாக்குகள், கம்யூனிஸ்ட் வாக்குகளும் நடராஜனுக்கு இருக்கிறது.

அமமுக சார்பில், போட்டியிடும் அப்பாதுரைக்கு எஸ்டிபிஐ ஆதரவளித்துள்ளது. எனினும் மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து பாஜக வெற்றிபெறச் செய்துவிடக் கூடாது என்பதில் எஸ்டிபிஐ கட்சியினர் தெளிவாக உள்ளனர். இதனால் அமமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இறுதியாகச் சொல்லவேண்டுமெனில், பி.ஆர்.நடராஜனின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

எப்படியும் வெல்வோம் என்று பாஜகவினர் அதிகம் நம்பும் தொகுதி கோவை. பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனும் களத்தில் கடும் நெருக்கடியுடன் போட்டி போடுகின்றனர். இணையதள கருத்துக் கணிப்பின்படி யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவுக்கு இழுபறி நிலை நீடிக்கிறது. 3-வது இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரனும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கல்யாண சுந்தரமும் சம அளவு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamadenu.in/opinion-poll-result?utm_source=site&utm_medium=TTH_election2019_ban

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE