இது எம் மேடை: தென்னை விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்

வழுக்குப்பாறை பாலு - விவசாயிகள் சங்கம், பொள்ளாச்சி:

பொள்ளாச்சி தொகுதியில் மிக அதிகமாக சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. அவற்றை நம்பி சுமார் இரண்டு லட்சம் குடும்பங்கள் உள்ளன. தேங்காய் விலை சரிவு, கொப்பரைக்கு விலையின்மை, ஈரியோபைட் நோய்த் தாக்குதல், வறட்சி போன்றவை இவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதற்கு ஒரே தீர்வு, டாஸ்மாக்கை ஒழிப்பது அல்லது தென்னங்கள் இறக்க அனுமதி கொடுப்பது.

தென்னங்கள் இறக்குவதால் விவசாயிகளுக்குத் தினசரி குறைந்தபட்ச நிரந்தர வருமானம் கிடைக்கும். உபரி உற்பத்தி இருக்காது என்பதால் தேங்காய்களுக்கும் நிலையான விலை கிடைக்கும். இவற்றை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கள் இறக்குவதுகுறித்து விவசாயிகளுக்கு சாதகமான நிலையை உருவாக்குவேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றவில்லை.

இன்று பொள்ளாச்சியில் தென்னை விவசாயத்தில் வருமானம் இல்லாததால் ஏராளமான தென்னந்தோப்புகள் பண்ணை விடுதிகளாக மாறிவருகின்றன. பல தோப்புகள் அழிக்கப்பட்டு அங்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. தென்னையை ஒரு குடும்பத்தில் பெற்றெடுத்த பிள்ளை என்பார்கள். ஆனால், பொள்ளாச்சியில் தென்னையைப் பெற்றெடுத்த விவசாயிகள் கண்ணீரில் மிதக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் தென்னை விவசாயம் அழிந்துவிடும். பொள்ளாச்சி இளநீர் என்கிற பெருமையும் காணாமல்போய்விடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE