இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவே தனிப் பெரும் கட்சி!

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.

தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது அதிமுக.

முற்பகல் பிற்பகல் 12.20 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஓர் இடத்திலும், பாமக ஓர் இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் மாநில கட்சிகளில் அதிமுகதான் தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.

அதிமுகவைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் 33 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இலை அலை!

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது சூறாவளி சுற்றுப் பயணப் பிரச்சாரத்தால் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். அவர் தனது பிரச்சாரத்தில், அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, 'செய்வீர்களா... செய்வீர்களா' என்று ஒவ்வொரு தொகுதியிலும் உரைத்தது மக்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. இதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இலை அலையே மேலோங்கியிருப்பது தெரியவந்தது.

அதேவேளையில், திமுக ஓர் இடத்தில்கூட முன்னிலை பெறாதது, அந்தக் கட்சி மத்தியில் அங்கம் வகித்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் மீதான அதிருப்தியையே காட்டுகிறது.

பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, தங்களை மாற்று அணி என்று கூறிக்கொண்டாலும், அதன் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாததையே முடிவுகள் காட்டுகின்றன. தருமபுரியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார்.

தனித்துப் போட்டியிட்டஅனைத்துத் தொகுதிகளிலும் சொற்ப வாக்குகளையே பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE