சேலம், நாமக்கல்லில் விறுவிறு மறுவாக்குப்பதிவு: இடது கை நடு விரலில் அடையாள மை

By செய்திப்பிரிவு

சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 213-வது வாக்குச்சாவடி மற்றும் நாமக்கல் தொகுதிக்கு உள் பட்ட கோட்டப்பாளையம் வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடந்தது. சேலத்தில் 76.8 சதவீதம், நாமக்கல்லில் 84.6 சதவீதம் பதிவாகின.

தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாநகராட்சி 10-வது வார்டில் உள்ள 213-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானது. தேவைப் பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்தலாம் என அப்போது முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் 746 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்த லின்போது, ஆண்கள் 268 பேரும், பெண்கள் 311 பேரும் என 579 பேர் வாக்களித்தனர். மொத்தம் 77.61 சதவீதம் வாக்குப்பதிவானது.

பூத் ஏஜென்டுகள் வாக்குவாதம்

இந்நிலையில் 213-வது வாக்குச் சாவடி மையத்துக்கு மே 10-ம் தேதி மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை யடுத்து பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 213-வது வாக்குச்சாவடி மையத்தில் சனிக்கிழமை மறுதேர்தல் நடந்தது. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். அப்போது பூத் ஏஜென்டுகளின் கையெழுத்தில் வேறுபாடு இருந்தது.

51 நிமிடம் தாமதம்

மேலும் அதிமுக, தேமுதிக வேட் பாளர்களது படிவம் கிடைக்கப் பெறாமல் இருந்தது. இப்பிரச்சினை களை சீர்செய்திட காலதாமதம் ஏற்பட்டது இதனால் வாக்குப்பதிவு 7.51 மணிக்கு தொடங்கியது.

காலையிலேயே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். ஏற்கனவே இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தது. தற் போது நடு விரலில் மை வைக்கப்பட்டது. மொத்தம் 746 வாக்காளர்களில் 720 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

காலை 10 மணிக்கு 31.5 சதவீதம் வாக்குப்பதிவானது. மாலை 6 மணி வரையில் மொத்தம் 76.8 சதவீதத்தினர் வாக்களித்தனர். ஆண்கள் 256 பேரும், பெண்கள் 317 பேரும் என மொத்தம் 573 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலைவிட இந்த முறை 6 பேர் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

கோட்டப்பாளையத்தில் 84.6 சதவீத வாக்குப்பதிவு

நாமக்கல் தொகுதியில் கோட்டப் பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக் கப் பள்ளி வாக்குச்சாவடி எண்.37-ல் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது, இயந்தி ரத்தில் ‘ஃபேக்டரி மோட் எரர்’ என்று காண்பித்தது.

இதையடுத்து, கோட்டப்பாளையம் வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோட்டப் பாளையம் ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 439 ஆண்கள், 458 பெண்கள் என மொத்தம் 897 வாக்காளர்கள் உள்ளனர்.

மாலை 6 மணி இறுதி நிலவரப்படி 84.6 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 759 பேர் வாக்களித்தனர். இதில், ஆண்கள் 368 பேர், பெண்கள் 391 பேர். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடை பெற்ற தேர்தலில் 728 பேர் வாக்களித் தனர். தற்போது கூடுதலாக 3 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE