தமிழகம் முழுக்க வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா: தேர்தல் அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருவதாகவும் அதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை பகல் 12 மணியளவில் வந்த ஸ்டாலின், தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் ஒரு புகார் மனுவை வழங்கினார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் அதிமுக கட்சி ஏஜென்ட்கள் மற்றும் தொண்டர்கள் மூலமாக கடந்த 2 நாட்களாக பணப் பட்டுவாடா தீவிரமாக நடந்து வருகிறது. இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் போலீஸாரிடமும் புகார் அளித்தும் பலன் இல்லை. கடந்த 22-ம் தேதி முதல் தமிழகத்தின் பல இடங்களில் வாக்காளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்தை அதிமுகவினர் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களும் அளிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக புகார் அளித்தாலும் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில், போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீஸ் வாகனங்களில்கூட பணம் கொண்டு செல்கின்றனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாத நிலை உள்ளது.

தேர்தல் ஆணையம் கெடுபிடியாக இல்லாவிட்டால் ஜனநாயக ரீதியிலான அரசு அமையாது. தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பணம் கொடுப்பதற்கு வழி ஏற்பட்டுவிட்டது. இதனால் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் காவல்துறையின் கைக்கு சென்றுவிட்டது. இது ஜனநாயகத்தையே கொல்வதற்கு சமமாகும். பணப் பட்டுவாடாவைத் தடுக்கச் செல்லும் திமுகவினர் மீதே நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் 144 தடையுத்தரவை உடனடியாக நீக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் ஸ்டாலின் குறிப்பிட் டிருந்தார்.

பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் தருவதை போலீஸார் தடுக்கவில்லை. புகார் கொடுத்தால் தேர்தல் பார்வையாளர்கள் கண்டுகொள்வதில்லை. திமுக வேட்பாளர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டிருப்பதால் ஜனநாயகம் கேலிக்குரியதாகியுள்ளது.

சில இடங்களில் அதிமுகவினர் ரூ.200-தான் தருகிறார்கள் என்று சொல்கிறீர்கள். அந்த இடங்களில் மீதிப்பணத்தை தராமல் அவர்கள் கட்சியினர் அமுக்கியிருப்பார்கள். திமுகவினரும் பணம் தருகிறார்கள் என்று கூறுகிறீர்கள். அதற்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும். அதிமுகவினரின் பணப் பட்டுவாடா பற்றி கொடுத்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரவீண்குமார் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்