ஆளுங்கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கக் கூடாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ஆளுங்கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கக் கூடாது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதி மீறல்களை தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் ஆளுங்கட்சியின் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் உச்சகட்டத்தை எட்டி விட்டன.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாரி இறைக்கப்பட்டதும் வரலாறு காணாதவையாகும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களின் வழித்தடங்களில் இயக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வருவதற்காக திருப்பிவிடப்பட்டன. இதனால், அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பயணம் செய்ய பேரூந்துகள் இல்லாமல் அவதிப்பட்டனர்.

அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு, அவற்றுக்கு சொந்தமான பேருந்துகளும் பொதுக்கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டும் பணிக்கு திருப்பிவிடப்பட்டன.

தனியார் பேருந்து மற்றும் பிற வாகனங்களையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மிரட்டி ஆளுங்கட்சிக்கு சேவை செய்ய அனுப்பிவைத்தனர். தருமபுரி கூட்டத்திற்கு மக்களைத் திரட்டுவதற்காக மட்டும் மொத்தம் 2400 பேருந்துகளும், பிற வாகனங்களும் பயன்படுத்தப் பட்டன. கிருஷ்ணகிரி கூட்டத்திற்காகவும் இதே எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக அழைத்துவரப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே கோவில்களிலும், திடல்களிலும் வைத்து பிரியாணி பொட்டலங்களும், வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு வந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500 வழங்கப்பட்டது.

பல இடங்களில் பணத்தை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சிகளையும் காண முடிந்தது. இந்தக் காட்சிகளை பல்வேறு தொலைக்காட்சிகள் படம் பிடித்து வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளும் இவற்றை நேரடியாக பார்த்தனர். பல கிராமங்களில் உள்ள மக்கள் அ.தி.மு.க. கூட்டத்திற்கு தங்களை அழைத்துச் சென்றவர்கள் தங்களுக்கு ரூ. 500 பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் தரப்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால், இந்த விதிமீறல்களை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ள வில்லை. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பொதுக்கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 20 கோடி செலவிடப்பட்டதாக தெரிகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் மொத்தமாக ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் விதிகள் கூறுகின்றன. ஆனால், ஒரு வேட்பாளருக்காக ரூ.20 கோடியில் கூட்டம் நடத்தி நடத்தை விதிகளை ஆளுங்கட்சியினர் கேலிக் கூத்தாக்குகின்றனர். அதை தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இது தான் ஜனநாயகமா?

தருமபுரி தொகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிக்கு வந்த மக்களை முறைகேடாக பணம் கொடுத்தும், மிரட்டியும் பிரச்சார கூட்டத்திற்கு அழைத்துச் சென்றதற்காக இரு ஊராட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகி பழனி என்பவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என்ற விவரங்கள் அடங்கிய ஆவணமும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெயரளவில் இந்த நடவடிக்கைகளை எடுத்த அதிகாரிகள் இதற்கெல்லாம் காரணமான தருமபுரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவை ஹெலிபேடில் தருமபுரி வேட்பாளர் வரவேற்று காலில் விழுந்து வணங்கியுள்ளார். பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்தில் வேட்பாளர் இருந்ததால், கூட்டத்திற்கான செலவுகளை அவரது கணக்கில் தான் சேர்க்க வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரிகள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி கோடிகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்காக மேலும் பல கோடிகளை ஆளுங்கட்சி வேட்பாளர்களும், அமைச்சர்களும் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே தேர்தல் தொடர்பான பணியிலுள்ள அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவதாக விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாரிகள் இன்னும் ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாகவே இருக்கின்றனர். இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் நடத்தப்படும் தேர்தல் நியாயமானதாகவோ, நேர்மையானதாகவோ அல்லது சுதந்திரமானதாகவோ இருக்காது.

தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதி பிரச்சாரக் கூட்டங்களுக்காக நடந்த விதிமீறல்கள்பற்றி விசாரணை நடத்துவதுடன், இவற்றுக்காக செலவிடப்பட்ட தொகை முழுவதையும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனியும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடக்காமல் தடுக்க இந்த இரு தொகுதிகளுக்கும் கூடுதல் பார்வையாளர்களையும், துணை ராணுவத்தினரைக் கொண்ட பறக்கும் படைகளையும் தேர்தல் ஆணையம் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE