ஓட்டுப்பதிவு நாளில்கூட பூத் சிலிப் பெறலாம்: பிரவீண் குமார்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தல் நடக்கும் ஏப்ரல் 24-ம் தேதியன்று கூட பூத் சிலிப்களை வாக்கா ளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட 13.62 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை இப்பணிகள் நடக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டும், பூத் சிலிப் பெறாதவர்கள், தேர்தல் நடக்கும் நாளில்கூட பூத் சிலிப்பை பெற்றுக்கொள்ளலாம். வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வெளியே தேர்தல் அலுவலர்கள் அவற்றை விநியோகம் செய் வார்கள். அதைப் பெற்று தேர்தலில் வாக்களிக்கலாம்.

இதுதவிர, வாக்காளர் அட்டையில் புகைப்படம் மாறியிருப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

11 ஆவணங்கள்

புகைப்பட அடையாள அட்டையில் புகைப்படம் சரியாக இல்லாவிட்டாலோ, வேறு பிரச்சினைகள் இருந்தாலோ வாக்காளர்கள் புகைப்பட ஆதாரத்துக்காக 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசலை எடுத்துவர வேண்டும்.

பெயர் இருந்தால்தான் ஓட்டு

புதிய தொகுதிக்கு ஒருவர் குடிபெயர்ந்திருந்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும். அவர் தனது பழைய தொகுதியில் வழங்கப்பட்டிருக்கும் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வாக்களிக்கலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE