திமுகவை புறக்கணித்ததன் விளைவை மக்கள் அனுபவித்து வருகின்றனர்: துவரங்குறிச்சியில் கருணாநிதி பேச்சு

By செய்திப்பிரிவு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை புறக்கணித்ததன் விளைவை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட துவரங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து கருணாநிதி பேசியது: “தமிழகத்தில் திமுகவின் கடந்தகால ஆட்சியில் செய்த சாதனைகளை தடுத்து, மக்களின் எதிர்காலத்தையே அதிமுக ஆட்சி கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள், அவற்றையெல்லாம் வேதனையாக்கியது அதிமுக ஆட்சி.

ரூ.800 கோடியில் தலைமைச் செயலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆட்சி மாறியதும் அந்த கட்டிடத்திலிருந்து தலைமைச் செயலகத்தை மாற்றி பழைய இடத்திலேயே செயல்படும் என தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி யில் கட்டப்பட்டது என்பதாலேயே புறக்கணித்துள்ளனர். ஒரு ஆட்சி மாறி மற்றொரு ஆட்சி வரும்போது நல்ல காரியங்களை ஒழித்துவிட்டு, தன் இஷ்டத்துக்கு செயல்படுவது ஜனநாயகம் அல்ல. இதைக் கேட்டால் திமுக மீது கோபப்படுகின்றனர். அதிமுக ஆட்சி செய்த நல்ல காரியம் விலைவாசியை ஏற்றியதுதான். நாம் தினந்தோறும் வீட்டுக்கு வாங்கும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இரண்டு மடங்கு விலை ஏறிவிட்டது. நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம் விலைவாசி ஏறுகிறது. இதுதான் அதிமுக அரசின் ஆட்சி” என்றார் கருணாநிதி.

மேடையைத் தவிர்த்தார்…

திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்ட கருணாநிதி விராலிமலை கடைத் தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோன்று துவரங்குறிச்சியில் கருணாநிதி பேச நாடாளுமன்ற வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கருணாநிதி மேடைக்கு வராமல், வேனிலிருந்தபடி சின்னச்சாமியை ஆதரித்து பேசிவிட்டு, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லையா தனது ஆதரவாளர்களுடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தனது சொந்த ஊரான துவரங்குறிச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மேடையேறி திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE