இளம் விரல்கள் பங்கேற்கும் தேசியத் திருவிழா!

By வெ.சந்திரமோகன்

தற்போது தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துவருகின்றன. அரசியல் தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள், அனுதாபிகள், எதிர்ப்பாளர்கள், ‘நடுநிலையாளர்கள்’ என்று பலர் தொலைக்காட்சிகளில் தோன்றி தங்கள் கருத்துகளையும் வாதங்களையும் எடுத்துரைக்கின்றனர்.

மேலும், ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களின் பிரச்சாரங்களையும் தொலைக்காட்சிகள் உடனுக்குடன் காட்டிவிடுவதால், தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வமும் முனைப்பும் முன்பைவிட அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஒரு விளம்பரம்…

புதிய ஆச்சரியம் என்னவென்றால், பனியன் முதல் பைக் வரையிலான சாதனங்களுக்கான விளம்பரங்களில் வாக்காளர்களைத் தூண்டும்விதமான வாசகங்கள் இடம்பெறுவதுதான். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒரு பைக் விளம்பரத்தில் “அறிமுகமானவர்கள் இருக்கட்டும்… இந்த முறை ‘டேலண்டுக்கு’ வாக்களிப்போம்” என்கிறார் ஒரு பைக் சாரதி. ஒரு பனியன் விளம்பரத்தில் அடக்குமுறைகளைக் கடந்து ஓட்டு போடச் செல்கிறார் ஒரு இளம் வாக்காளர்.

“சரியான வயரைத் தேர்ந்தெடுத்துவிட்டாய் தம்பி... சரியான கட்சியையும் தேர்ந்தெடு” என்று ஒரு ஹார்ட்வேர் கடைக்காரர் பூடகமான குரலில் அறிவுறுத்துகிறார். கண்டிப்பாக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தும் அரசு விளம்பரங்கள் நமக்குப் பழக்கமானவைதான் என்றாலும் இந்த முறை, தனியார் நிறுவனங்கள் தேர்தல்மீது காட்டும் ‘அக்கறை’ ஆச்சரியமளிக்கிறது. இவர்களின் முக்கியக் குறி, முதல்முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்கள்தான்.

66 லட்சம் புதிய வாக்காளர்கள்

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியாவின் 16-வது மக்களவைத் தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் ஒன்று இந்த முறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இளம் வாக்காளர்கள். இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டும் 66 லட்சம் புதிய வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராக உள்ளனர். சென்னையில் 4.04 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அவர்களைக் கவர்வதற்காகத் தெருக்கள் தொடங்கி இணையம் வரை முக்கியக் கட்சிகள் வலைவிரித்துக் காத்திருக்கின்றன. பதிவுசெய்யப்பட்ட குரல்களின் வழியாக அந்தந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் உங்கள் மொபைல் எண்ணுக்கே அழைத்துத் தங்களுக்கு ஆதரவு கோருகின்றனர். இவை தவிர, தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்வகையில் அரசு நிர்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

எதன் அடிப்படையில்?

பெரும்பாலான புதிய வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழம்பியிருந்தாலும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள புதிய வாக்காளர்கள் தெளிவான சில முடிவுகளோடு இருப்பது தெரிகிறது. தங்கள் வாக்குகள் வீணாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, கல்வி மேம்பாடு, ஊழல் வெறுப்பு போன்றவைதான் அவர்களின் வாக்குகளைத் தீர்மானிக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் வாக்குகள் குறித்துத் தெளிவாக இருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், இது ஒருவகையில் சுயநலத்தின் அடிப்படையில், அதாவது தங்கள் எதிர்காலத்தை மட்டும் கணக்கில்கொண்டு எடுக்கும் முடிவோ என்று தோன்றுகிறது. சமூகத்தின் மிக முக்கியப் பிரச்சினைகளான சாதி, மதவாதம், பெருநிறுவன-அரசியல் கூட்டு போன்றவற்றையெல்லாம் இளைஞர்கள் தங்கள் வாக்குகளோடு பொருத்திப் பார்க்கிறார்களா என்பது சந்தேகம்தான்.

இணையமயமான தேர்தல்

புதிய வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர்கள்குறித்த தகவல்களைத் தேடி அலைந்து திரிய வேண்டியதில்லை என்ற அளவுக்குத் தகவல்கள், இணைய செய்தி இதழ்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொட்டிக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களை வைத்து, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு புதிய வாக்காளர்கள் வர முடியும் என்பது ஒரு சாதகமான விஷயம்தான்.

அதேசமயம், ஒருசார்பாக அளிக்கப்படும் தகவல்கள் சில குறிப்பிட்ட கட்சிகளை நோக்கி, அனுபவமற்ற புதிய வாக்காளர்களைத் திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. அவற்றைப் பரிசீலனை செய்து தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டியது புதிய வாக்காளர்களின் கடமை.

தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்