வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து நீலகிரி பாஜக வேட்பாளர் வழக்கு

By செய்திப்பிரிவு

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தி, தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நான், கடந்த 3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தேன். எனது தேர்தல் முகவராக வரதராஜன் என்பவரை நியமித்துள்ளேன். வேட்புமனுவோடு சேர்த்து வழங்க வேண்டிய ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களை சமர்ப்பிப்பதற்காக தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு கடந்த 5-ம் தேதி வரதராஜன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பிற்பகல் 2 மணியளவில் அவர் சென்ற கார் பழுதடைந்துவிட்டது. அதன்பிறகு வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்து நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தைச் சென்றடைவதற்கு மாலை 4 மணி ஆகிவிட்டது. அதன்பின்னர் அந்த படிவங்களை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், 7-ம் தேதி வேட்புமனுக்களை பரிசீலனை செய்த தொகுதி தேர்தல் அதிகாரி, 5-ம் தேதி மாலை 3 மணிக்கு முன்பாக ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களை தாக்கல் செய்ய வில்லை என்று கூறி எனது வேட்பு மனுவை நிராகரித்து விட்டார்.

‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களை 3 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்கவில்லை என்ற ஒரேயொரு காரணத்தைக் கூறி எனது வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் செயல் சட்ட விரோதமானது.

ஆகவே, என் பெயரையும் நீலகிரி தொகுதி வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை நீலகிரி தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குருமூர்த்தி கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

“விசாரிக்க மூவர் குழு”

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சில ஆவணங்களை தாமதமாகத் தாக்கல் செய்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணன், பொதுச் செயலாளர் (அமைப்பு) எஸ். மோகன்ராஜுலு, மாநில செயலாளர் சுப்பிரமணி ஆகியோரைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு நீலகிரி சென்று விசாரித்து அறிக்கை தந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE