குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என்றார்.
தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் து.ஜெயவர்தனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று கந்தன்சாவடியில் பிரச்சாரம் செய்தபோது பேசியது:
"மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ஊழல் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த தி.மு.க-வை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நீங்கள் அனைவரும் இன்று இங்கே கூடி இருப்பதைப் பார்க்கும் போது உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
150 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட தி.மு.க-வினர் அனைவரும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.
2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது, 177 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். அவற்றில் 150 வாக்குறுதிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது எவ்வளவு பெரிய சாதனை?
மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்கு இன்னும் 2 ஆண்டுகால அவகாசம் எங்களுக்கு உள்ளது. அதற்குள்ளாக நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆனால், 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஒட்டி, தி.மு.க-வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கும் போது திமுக மீண்டும் வாக்குறுதிகள் அளிப்பது வாக்காளப் பெருமக்களாகிய உங்களை ஏமாற்றும் செயல்.
குஜராத்துடன் ஒப்பீடு
ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை எளிய நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்தும் கண்ணாடியாக விளங்குபவை மனித வளக் குறியீடுகள். இதுவே விளம்பர வளர்ச்சி எது என்பதையும், உண்மையான வளர்ச்சி எது என்பதையும் தெளிவுபடுத்தும்.
குஜராத்தில் 16.6 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டும் தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு வயதடைவதற்குள் 38 குழந்தைகள் குஜராத்தில் இறந்து விடுகின்றன. ஆனால், தமிழ் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 21 மட்டுமே. ஒரு லட்சம் குழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம் குஜராத்தில் 122. தமிழ்நாட்டில் இது 90 தான்.
2011-12 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 லட்சம் மெட்ரிக் டன் தான். தமிழ்நாட்டில் இது 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயரளவு ஆகும். அதே போன்று, உணவு தானிய உற்பத்தித் திறன் குஜராத்தில் ஹெக்டேருக்கு 21.4 குவிண்டால் தான். தமிழ்நாட்டில் இது 38.5 குவிண்டால் என்ற உயரளவாகும்.
குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 22,220 ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996. குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான். தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். அதாவது, 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிகம்.
2011 முதல் 2013 வரை குஜராத்தில் தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை 1,20,016. ஆனால், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை 1,61,732. அதாவது 41 ஆயிரத்து 716 தொழில்கள் கூடுதலாக தமிழ் நாட்டில் துவங்கப்பட்டுள்ளன.
2012-13 ஆம் ஆண்டு குஜராத்தில் பெறப்பட்ட அன்னிய முதலீடு வெறும் 2,676 கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாட்டில் பெறப்பட்டதோ 15,252 கோடி ரூபாய். ஊரகப் பகுதிகளில் தனிநபர் சராசரியாக செலவு செய்வது குஜராத்தில் 1,430 ரூபாய் ஆகும். தமிழகத்தில் இது 1,571 ரூபாய் ஆகும். நகர்ப்புறப் பகுதிகளில் தனிநபர் சராசரி செலவு குஜராத்தில் 2,472 ரூபாய் தான். தமிழ்நாட்டில் இது 2,534 ரூபாய் ஆகும்.
2001 முதல் 2012 வரையிலான காலத்தில் குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது 29 சதவீதம் குறைந்துள்ளது. புரிந்து கொண்டீர்களா? குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் 29 சதவீதம் குறைந்துள்ளது. அதே போன்று சாதி மதக் கலவரம் 2005 முதல் 2013 வரை குஜராத்தில் 479 ஆகும். தமிழ்நாட்டில் இது 237 தான்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன் பெறும் மாநிலம் தமிழ்நாடு. குஜராத்தில் இதற்கு நேர் மாறான நிலைமையே உள்ளது. பொது விநியோகத் திட்டத்திலிருந்து உணவுப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பது குஜராத்தில் 63 சதவீதம். தமிழ்நாட்டில் இது வெறும் 4 சதவீதம் தான்.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; ஏழை எளியோர் பங்கு பெறும் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள்? சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா?
அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல. தமிழ்நாட்டின் இந்த லேடிதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
வாக்களிப்பதற்கு முன்பு யாருக்கு வாக்களித்தால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்பதை ஆராய்ந்து, சிந்தித்து, வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை, குறிப்பாக பெண்களை, இளைய சமுதாயத்தினரை, முதன் முறை வாக்காளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கக் கூடிய வலிமையை நீங்கள் அளிக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியிலே அமையப் பெறும் போது, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும்; தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்; தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் ஆக்கவும்; சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்; வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்கவும்; பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையாக இருக்கவும்; தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் ஜெயலலிதா.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago