அதிமுக ஆதரவு பாஜகவுக்குத் தேவையில்லை: பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் பேட்டி

By செய்திப்பிரிவு

அதிமுக ஆதரவு பாஜகவுக்குத் தேவையில்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது மாற்றத்துக்கான கூட்டணி யாகவும் விளங்குகிறது. மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. எனவே தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாஜகவினரால்தான் முடியும்.

நிரந்தரத் தீர்வு ஏற்படும்

இலங்கை தமிழர் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, வெளி நாடுவாழ் தமிழர் பாதுகாப்பு, மீனவர் பிரச்சினை, காவிரி, கச்சத் தீவு போன்ற பிரச்சினைகளில் தீர்வு காண பலவீனமான மன்மோகன் சிங் அரசு தவறிவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிச்சயம் நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தமிழகத்துக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக நரேந்திரமோடி பலமுறை பிரச்சாரம் செய்துள் ளார். அதேபோல் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் முகா மிட்டு பிரச்சாரம் செய்கின்றனர். இதன்மூலம் பாஜக தமிழகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை உணரலாம்.

மறைமுக ஆதரவா?

ஜெயலலிதா சில நாள்களாக பாஜகவையும் நரேந்திர மோடியையும் விமர்சித்துப் பேசி வருவது வருந்தக்கூடியதாக உள்ளது.

பாஜகவை விமர்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மறை முக ஆதரவு தெரிவிப்பதுபோல் உள்ளது. பாஜக கூட்டணிக்கு மு.க.அழகிரி ஆதரவு தெரிவித் துள்ளதை வரவேற்கிறோம். யார் ஆதரவு தெரிவித்தாலும் அதை வரவேற்போம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE