உயர்கல்வி வரை இலவசக் கல்வி, கச்சத்தீவை மீட்டல், நதிகள் இணைப்புக் கொள்கை உள்ளிட்டவற்றை அதிமுக தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். அதன் முக்கிய அம்சங்கள்:
1. அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் - மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கும் திட்டம்
வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்கள், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற கணவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோருக்கு மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500/- வழங்கும் திட்டம் மத்திய அரசு நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
2. எம்ஜிஆர் தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்
வெளிநாடுகளில் இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற பயிற்சியும், திறன் மேம்பாடும் பெற்றிட புதிய அமைப்பு ஒன்றினை ஏற்படுத்த, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
3. நீர் மேலாண்மை திட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
4. பொருளாதாரக் கொள்கை
வேளாண் துறை, தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதார மந்த நிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு மத்திய அரசு தனித்தன்மையுள்ள சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டுமெனவும், அத்திட்டங்களை மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
5. கல்விக் கொள்கை
அ) பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை, மாநில அரசின் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை.
ஆ) தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்த விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
இ) உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்க நடவடிக்கை.
ஈ) நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மாணவர்கள் கல்விக் கடனைத் திரும்ப செலுத்த இயலாமல் தவித்து வருகிறார்கள். எனவே, மாணவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் இதர வங்கிகள் மூலம் பெற்ற கல்விக் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
6. பொது விநியோகத் திட்டம் :
தமிழ்நாட்டின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு அளவில் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் ஒதுக்கீட்டை முழு அளவில் வழங்க நடவடிக்கை.
7. மகளிர் நலன் மற்றும் சமூக நீதி
'தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்' மற்றும் 'தமிழ்நாடு தொட்டில் குழந்தைகள் திட்டம்' ஆகிய திட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசியத் திட்டங்களாக செயல்படுத்துமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
8. மீனவர் நலன்
தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அரசின் அத்துமீறிய தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை.
அரசால் அறிவிக்கப்படும் மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அனைத்து மீனவர்களுக்கும் மாதம் தலா ரூ. 7,000/- வீதம் வாழ்வாதார ஈட்டுத் தொகையாக வழங்கிட, மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
9. நெசவாளர் நலன்
கைத்தறி தொழில்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கைத்தறித் தொழில் வளர்ச்சி மிகவும் நலிவடைந்துவிட்டதால், கைத்தறி நெசவாளர்களின் நலன் காக்க கைத்தறி உற்பத்தி இனங்களுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
10. தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பின்மை
முதன்மைத் தொழிலான வேளாண்மை, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புறத் தொழில்கள், உடலுழைப்பு மிகுந்த தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறு, குறுந்தொழில்கள் போன்றவை மட்டுமே, வேலை வாய்ப்பற்ற கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பினை வழங்க வகை செய்யும் என்பதால், அவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் மிக்க திட்டங்கள் வகுக்க வேண்டும்.
11. இளைஞர் நலன்
பள்ளி இறுதி வகுப்பு பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியுள்ள வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை, மாதாந்திர உதவித் தொகையாக கல்வித் தகுதிக்கு ஏற்ப 2,000/- ரூபாய் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
12. ஈழத் தமிழருக்கு உரிய நீதி கிடைத்திடவும், அவர்தம் உரிமைகள் நிலைநாட்டப்படவும் நடவடிக்கை
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்து உதவியவர்கள் மீதும் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, ஈழத்தில் நடைபெற்ற துயரங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர நடவடிக்கை ஏடுக்கப்படும்.
13. கச்சத் தீவை மீட்டல் மற்றும் மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுத்தல்
கச்சத்தீவினை மீட்டு, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக நிலைநாட்டிட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
14. மதச்சார்பின்மை
இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்பிற்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
15. மொழிக்கொள்கை
உலக அளவில் தொன்மையான செம்மைச் செறிவு கொண்ட தமிழ் மொழியை, இந்திய நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
16. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு
அ) மத்திய அரசு, அதன் வரி வருவாயில் 60 சதவீதத்தை, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அதிமுக வலியுறுத்தும்.
17. நதிகள் இணைப்புக் கொள்கை
இந்திய நதிநீர் வழித்தடங்கள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவதுடன், இத்திட்டத்தை முழுமையான அளவில் நிறைவேற்றிட அதிமுக வலியுறுத்தும்.
18. மத்திய அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள்
தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் நெய்வேலி ஆகிய மத்திய அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும், தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்கே வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
19. மாசுக் கட்டுப்பாடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள்
தேசிய அளவில் தொழிற்சாலை மற்றும் வாகனப் புகையால் காற்று மண்டலம் மாசு அடைவதைத் தடுப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுடன் உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை
20. புலம் பெயர்ந்தோர் நலன்
அ) வேலைவாய்ப்பிற்காக அயல்நாடுகளில் குடிபெயர்ந்த இந்தியர்களின் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், அதே சமயத்தில், வெளிநாடுகளில் வாழும் இந்திய தமிழ் மக்களின் குடியுரிமை, பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
21. சிறுபான்மையினர் நலன்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள மத உரிமை, மதம் சார்ந்த இதர உரிமைகளுக்கு பொது சிவில் சட்டம் எதிரானது என்பதால், அத்தகைய புதிய சட்டம் எந்த வடிவிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
22. குடிநீர்
தமிழ்நாட்டுக்கு 'தேசிய ஊரக குடிநீர்த் திட்டத்தின் கீழ்' போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, திட்டங்களை நிறைவேற்றி, அதிமுக பாடுபடும்.
23. சாலை போக்குவரத்து
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை வழங்கி, தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து, விரைவாக செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவதுடன், இத்திட்டங்கள் நிறைவேற அதிமுக பாடுபடும்.
24. ரயில்வே
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும், மக்களின் நலன் கருதி அனைத்து விரைவு ரயில்களும் சில நிமிடங்கள் நின்று செல்லும் வகையில் உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
25. நவீன விமான நிலையங்கள்
கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றம் சேலம் ஆகிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்து நவீனமயமாக்க வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
26. மின் ஆளுமை நிர்வாகம்
தேசிய அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் அளவிற்கு ஆழமாக பரவியுள்ள ஊழலை ஒழிக்கும் வகையில், 'நவீன தொழில்நுட்பம் நிறைந்த முழுமையான மின் ஆளுமைத் திட்டத்தை' அரசு நிர்வாகங்களின் அனைத்து மட்டத்திலும், அதாவது, கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி, ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், வட்டங்கள், மாவட்டங்கள், அனைத்துத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் உள்பட அனைத்து மட்டங்களிலும் உரிய கட்டமைப்பை உருவாக்கி, செயல்படுத்திட வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
27. நவீன பறக்கும் கப்பல் திட்டம்
கிழக்கு கடற்கரை சாலையின் சுற்றுலா மற்றும் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த, கடற்கரையோரமாக, கடல்நீர் மட்டத்திற்கு சற்று மேலாக பறக்கம் 'ஹோவர்கிராப்ட்' எனும் பறக்கும் கப்பல் திட்டத்தினை செயலாக்கத்திற்கு கொண்டுவர மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
28. குடிமராமத்து திட்டங்கள்
கிராமப் பொருளாதாரம் மேம்படுவதற்கும், கிராமத் தொழில்கள் செழித்தோங்குவதற்கும் நீர்வள மேம்பாடு அத்தியாவசியமானதாகும். பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிர்வாகங்களுக்கு உட்பட்ட ஏரிகள், குளங்கள், ஊற்றுநீர் குளங்கள், வடிகால் ஏரிகள், சிற்றோடைகள், நீரோட்ட இணைப்பு வாய்க்கால்கள், தடுப்பணைகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றில் அதிய எண்ணிக்கையில் குடிமராமத்து செய்து சீரமைப்பதற்கும், புதிதாக ஏற்படுத்துவதற்கும் நவப்ரா திட்டங்கள், நபார்டு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி திட்டங்கள் வாயிலாக அதிக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்துத் திட்டங்களையும் முழு அளவில் நிறைவேற்றிட அதிமுக பாடுபடும்.
29. நீதித் துறை
உச்ச நீதிமன்றத்தின் மண்டல அளவிலான கிளை ஒன்றினை தமிழ் நாட்டில் ஏற்படுத்திட வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
30. அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவை நீக்குதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கும் சட்டம் வேறு எந்தவொரு கூட்டாட்சி அமைப்பிலும் காணப்படவில்லை. மத்திய அரசுக்கு, மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் தந்துள்ள அரசியலமைப்பின் 356 ஆவது பிரிவினை முழுமையாக நீக்க அதிமுக வலியுறுத்தும்.
31. தோட்டக்கலை-வேளாண்மை-விவசாயிகள் நலன்
சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய ஓர் உறுதியான கொள்கையை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அதிமுக வலியுறுத்தும்.
32. சூரிய மின்சக்தி
சூரிய மின் சக்தியை தமிழ் நாட்டின் ஊரக மற்றும் நகரப்புற பகுதிகளிலுள்ள அனைத்து அரசு நிலங்களிலும் உற்பத்தி செய்வதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்களை விரிவுபடுத்திட போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
33. கஜா புயல் நிவாரணம்
கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதார வசதிகளை வழங்குமாறு, மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
34. கூவம் ஆற்றை சீரமைத்து தூய்மைப்படுத்துதல்
கூவம் நதியை அழகுபடுத்திட மத்திய அரசு, ஒரு முன்னுரிமை அடிப்படையில், சிறப்பு மைய நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு அதிமுக வலியுறுத்திகிறது.
35. ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பினராக இந்தியா ஏற்றுக்கொள்ளப்பட நடவடிக்கை
இந்திய நாடு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறத் தேவையான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
36. புதுச்சேரிக்குகு சுயாட்சி தகுதி
புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக இருக்கம் புதுச்சேரிக்கு முழு மாநிலம் என்ற சுயாட்சித் தகுதியை வழங்குமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
37. கேபிள் கட்டணக் குறைப்புக்கான நடவடிக்கை :
மக்களின் எதிர்பார்ப்பினை நிவர்த்தி செய்யும் வண்ணம் கேபிள் கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
38. வருமான வரி விலக்கு :
நடுத்தர வருவாய் பெறும் குடும்பங்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பினை ரூபாய் 8 லட்சமாகவும், நிலையான கழிவினை ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டுமென, அதிமுக வலியுறுத்தும்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago