காங்கிரஸும் பாஜக-வும் ஒன்றுதான்: நல்லகண்ணு

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லகண்ணு விழுப்புரத்தில் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சனிக்கிழமை விழுப்புரம் வந்த நல்லகண்ணு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடந்துகொண்டுதான் உள்ளது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக வேறு ஆட்சிதான் அமைய வேண்டும். கொள்கைரீதியாக மாற்று பொருளாதார கொள்கையுடைய ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும்.காங்கிரஸ், பாஜகவுக்கு அதிக வித்தியாசம் இல்லை. இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். காங்கிரஸின் ஊழல்களை ஒழிப்போம் என பாஜக சொல்வதை ஏற்கமுடியாது.ஊழல் செய்தார் என நீக்கப்பட்ட எடியூரப்பாவை மீண்டும் பாஜக தன் கட்சியில் சேர்த்துக்கொண்டது. ராமர் கோயில் கட்டுவோம். பொது சிவில் சட்டத்தை ரத்து செய்வோம் என பாஜக கூறியுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இத்திட்டம் நிறைவேற்ற போராடிய வைகோதான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினை உள்நாட்டு விவகாரம் தலையிட முடியாது என்று பாஜக சொல்கிறது. இதையேதான் காங்கிரஸும் கூறியது. பாஜக கூட்டணியில் உள்ள வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் ஆகிய கூட்டணி கட்சித்தலைவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சரவணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கொள்கைரீதியாக மாற்று பொருளாதார கொள்கையுடைய ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.காங்கிரஸ், பாஜகவுக்கு அதிக வித்தியாசம் இல்லை. இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE