நல்லாட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: ராமதாஸ்

சீரழிவு சக்திகளை வீழ்த்தி நல்லாட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தல் மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்.

கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகம் பெற்றதையும், இழந்ததையும் சிந்தித்துப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிர்வாகத் திறனில் சிறந்தவர் மோடியா... அல்லது இந்த லேடியா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மூன்றே மாதங்களில் மின்வெட்டைப் போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி தொழில் வளர்ர்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்தது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாகக் கூறி கடந்த 3 ஆண்டுகளில் 6500 படுகொலைகள், 66 ஆயிரம் கொள்ளைகள், 25 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் என்பது தெளிவாகிறது.

திட்டமிட்டு செயல்பட்டால் 3 ஆண்டுகளில் மின்வெட்டை போக்கிவிட முடியும் என்ற நிலையில் முந்தைய 5 ஆண்டு ஆட்சியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது தி.மு.க.வின் சாதனை. அதையே காரணம் காட்சி ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டை போக்குவதற்கு பதில் மின்வெட்டை அதிகரித்தது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை.

காவிரி பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்ததில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

எனவே, நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய வாய்ப்பை தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நீலகிரி தவிர மீதமுள்ள 38 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை, மாம்பழம், முரசு, பம்பரம் ஆகிய சின்னங்களிலும், புதுவையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமனுக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE