திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் உள்ளனர்: செல்வகணபதிக்கு சிறை குறித்து ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 3 நாட்களுக்கு முன்பு சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டணை வழங்கியது. பல விஷயங்கள் பற்றி பிரசாரக் கூட்டங்களில் பேசிவரும் திமுக, அதிமுக ஆகியவை இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை. திருடனுக்கு தேள் கொட்டினால் எப்படி சத்தம் போட முடியாதோ அப்படி உள்ளனர் ஜெயலலிதாவும் கருணாநிதியும்.

ஊழலுக்காக தண்டனை கிடைத்தது பற்றி விமர்சிக்காத இவர்கள் ஊழலைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்த சோனியா 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல் வித சாதனைகளை செய்துள்ள தாகக் கூறினார். தமிழகம் வந்த நரேந்திர மோடி பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத சாதனைகளை பாஜக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் செய்து சாதனை படைக்கும் என்கிறார்.

பாஜக ஆறரை ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த போதுதான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடங்கியது. மிகவும் லாபகரமாக இயங்கிவந்த தொலைத்தொடர்பு துறையை பிஎஸ்என்எல், விஎஸ்என்எல் என இரண்டாகப் பிரித்து அதில் விஎஸ்என்எல்-ஐ டாடா நிறுவனத்திற்கு ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் விற்பனை செய்து, தொலைத்தொடர்பு துறையை நலிவுறச் செய்தது பாஜக அரசு.

ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்தை விற்பனை செய்தது, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழலுக்கு வழியேற்படுத்திய அம்சத்தை கொண்டு வந்தது பாஜக. எனவே, காங்கிரஸுக்கு மாற்று பாஜக அல்ல. இருவரும் ஊழலில் சளைத்தவர்கள்தான்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத்தில் உள்ளதைப்போல தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பார் எனக் கூறி வருகிறார். குஜராத்தில் உள்ள 184 தாலுகாக்களில் 74 தாலுகாக்களில் குடிநீர் பஞ்சம் உள்ளது. 3 முறை முதல்வரான மோடி குஜராத்தில் குடிநீர் பிரச்சினையை சரி செய்யாதவர். தமிழகத்திலும் நாடு முழுவதும் எப்படி சரி செய்வார்?

தற்போது தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு பாஜக ஆட்சியில் கொண்டுவந்த மின்சார சட்டம்தான் காரணம். இந்த சட்டத்தை அதிமுக, திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரித்தன. ஆகவே, தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு இவர்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 3 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடாத இதர தொகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அவர்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தன்மையை அறிந்து ஆதரிக்கலாம் என தெரிவித்துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE