நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என தனது பிரச்சாரத்தில் முதல் முறையாக பாஜகவையும் தாக்கிப் பேசினார், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பேசினார்.
மேலும், "பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர் காவிரி நதிநீரை பெறுவதற்கு என்ன உத்தரவாதத்தினை பெற்றுள்ளனர்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெயலலிதா, பாஜகவை விமர்சிப்பது இதுவே முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.
கரூர் திருமாநிலையூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
1998-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து, மத்திய கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றது. அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை வரப் பெறவில்லை. இடைக்கால ஆணை தான் அமலில் இருந்தது. அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த அதிகாரிகள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பிற்கு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துகின்ற அதிகாரம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளை இயக்கும் அதிகாரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைத்தேன்.
அதை செய்வதற்குப் பதிலாக அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய், இந்திய பிரதமரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட நான்கு மாநில முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இதனை, அப்போதே நான் எதிர்த்தேன். இப்படிப்பட்ட ஓர் ஆணையத்தால் எந்தப் பயனும் இருக்காது என்று உணர்ந்ததால் தான் அதை நான் கடுமையாக எதிர்த்தேன்.
அதிகாரம் படைத்த அதிகாரிகள் குழுவை மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைக்க மறுத்ததால் தான், இனி அந்த அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால் தான், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொண்டதோடு, அந்த பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் 1999-ஆம் ஆண்டு நான் திரும்பப் பெற்றேன்.
அப்போது, தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. அந்தத் தருணத்தில் பாரதிய ஜனதா கட்சி கருணாநிதியை அணுகி காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்த தி.மு.க. மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. நான் தெரிவித்தது போலவே காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி வழங்கப்படவே இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் காவிரி நதிநீர் ஆணையத்தால் மேற்கொள்ள இயலவில்லை. அந்த அமைப்பால் தமிழகத்திற்கு எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு சம அளவிலேயே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியாலும், பாரதிய ஜனதா கட்சியாலும் ஆட்சி அமைக்கவே முடியாது. தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. தமிழ் நாட்டில் எந்தக் காலத்திலும் பாஜகவாலும் ஆட்சி அமைக்க முடியாது.
எனவே தான், மத்தியிலே பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்தப் பிரச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை பொறுத்தவரை பாஜகவும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன. தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன.
அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக செயல்படுகின்றன.
எனவே, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. பாஜகவுக்கும் வாக்களிக்கக் கூடாது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களையும், இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர்ப் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. பாஜக தலைவர்கள் தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறந்து விடுவதாக
சொன்னாலே, கர்நாடக மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுகிறோம் என்று பாஜக சொன்னாலே கர்நாடகத்தில் இந்த மக்களவை தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, இதைப் பற்றி பாரதிய ஜனதா கட்சியினர் எதுவுமே பேச மாட்டார்கள்.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர் நமக்குரிய காவிரி நதிநீரை பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து என்ன உத்தரவாதத்தினை பெற்றுள்ளனர்? அவர்கள் தமிழக மக்களுக்கு அதனை தெரிவிக்க வேண்டும். நமக்குரிய காவிரி தண்ணீரை அளிக்காமல், நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு. நமக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் நம்மை வஞ்சித்தது தான் கடந்த கால அனுபவம்.
எனவே, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் நமது ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் எந்தத் தீர்வையும் காண முடியாது. அவர்களால், நமக்குரிய காவிரி தண்ணீரை பெறவே இயலாது. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியானால், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் நமக்குரிய காவிரி நதிநீர் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்களா? இதைவிட பெரிய துரோகம் வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட பெரிய துரோகம் இருக்க முடியுமா?
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ், தி.மு.க., பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வரும் மக்களவை பொதுத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
ஏன் இந்த மாற்றம்... கரூர் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பாஜக.வை விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூறியதை உறுதிப்படுத்தியதுபோல் பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்காமல் இருந்துவந்தார். இதன் தொடர்ச்சியாக பாஜகவை விமர்சிக்காத அதிமுகவுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சனிக்கிழமை திடீரென அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago