குஜராத்தின் புதிய முதல்வர் யார்?: பாஜக உயர்நிலைக் குழு ஆலோசனை

குஜராத்தின் புதிய முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மாநில பாஜக உயர்நிலைக் குழுக் கூட்டம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதன்படி இப்போது குஜராத் முதல்வராக உள்ள மோடி டெல்லிக்கு இடம்பெயர்ந்துவிட்டால் புதிய முதல் வராக யாரை நியமிப்பது என்பது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.சி.பால்டு தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் காந்தி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடி, அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விஜய் ரூபானி நிருபர்களிடம் பேசியபோது, மே 16-ம் தேதிக்குப் பிறகுதான் குஜராத் புதிய முதல்வர் குறித்து விவாதிக்கப்படும், அதுவும் கட்சியின் மேலிட உத்தரவுப் படிதான் நடைபெறும் என்றார்.

புதிய முதல்வர் அமித் ஷா?

இப்போதைய நிலையில் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித் ஷா, மூத்த அமைச்சர்கள் ஆனந்தி பட்டேல், நிதின் பட்டேல், சுராப் பட்டேல், கட்சியின் மாநிலச் செயலாளர் பிகு டால்சானியா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவ தாகக் கூறப்படுகிறது.

இவர்களில் நிதின் பட்டேல், பிகு டால்சானியா ஆகியோர் முதல்வர் பதவியை ஏற்க தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE