தேசிய அளவில் ஏமாற்றம் அடைந்த முன்னணி வேட்பாளர்கள்

டெல்லியில் கடந்த வருடம் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, இம்முறை அங்கு ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக அருண் ஜேட்லிக்கும் ஏமாற்றமே ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகளை அடுத்து, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைப்பது தற்போது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனித்து 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மோடி ஆதரவு அலையையும் மீறி பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸின் அமரீந்தர் சிங்கிடம் தோல்வி கண்டுள்ளார். இதே போல முன்னணி வேட்பாளர்கள் பலர் படுதோல்வி கண்டுள்ளனர்.

உத்திர பிரதேசத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு வெற்றியைக் கூட பெறாமல் மொத்தமாக சரிந்துள்ளது. அதே போல, ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீரில் மொத்தமாக தோல்வியடைந்துள்ளது.

இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவையும் ஏமாற்றமளிக்கக் கூடிய வகையில் தோல்வி கண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றிக்காக இடதுசாரிகள் போராடி வருகின்றனர்.

டெல்லியில் கடந்த வருடம் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, இம்முறை அங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளை மட்டும் வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக தோல்வி கண்டுள்ளார்.

மேலும் காங்கிரஸின் கபில் சிபல், சச்சின் பைலட், பாஜகவின் ஸ்மிரிதி இரானி ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

காகிநாடாவில் காங்கிரஸின் பல்லம் ராஜூ, ராஜம்பேட்டில் பாஜக வேட்பாளர் புரந்தேவரி, பிஹாரின் சரணில் லாலு மனைவி ராப்ரி தேவி, சசராம் தொகுதியில் மக்களவைத் தலைவர் மீரா குமார், குர்கானில் ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாத்வ், உதம்பூரில் குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகரில் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் தோல்வி கண்டனர்.

கர்நாடகத்தில் எச்.டி.குமாரசாமி, பந்தராவில் பிரஃபுல் படேல், மும்பை வடக்கு - மத்தியில் பிரியா தத், மும்பை வட கிழக்கில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் மேதா பட்கர், சோலாபூரில் சுஷில் குமார் ஷிண்டே, அனந்தபூர் சாஹிபில் அம்பிகா சோனி, பார்மரில் ஜஸ்வந்த் சிங், ஆஜ்மீரில் சச்சின் பைலைட் ஆகியோரும் வீழ்ச்சி கண்டனர்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE